தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்குவதற்காக, பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கும் பணியில், ரேசன் கடை ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 14 முதல் ஜனவரி 17, 2022 வரை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரிசி அட்டைதாரர்கள், குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாநிலத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது.
டிசம்பர் 20 ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணைப்படி, பட்டியலில் உள்ள 20 பொருட்கள் அரிசி, வெல்லம், முந்திரி, பாசிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய், மஞ்சள் பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கடுகு, சீரகம், உப்பு, மிளகு, புளி, பருப்பு, ரவை, கோதுமை ஆகியவை மஞ்சள் பையில் வைத்து வழங்கப்படும்.
1,088 கோடி செலவில் 2,15,48,060 குடும்பங்களுக்கு 20 பொருட்கள் விநியோகிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகுப்புடன் முழு கரும்பும் வழங்கப்படும். மேலும், இலங்கைத் தமிழர்கள் மற்றும் அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு கரும்புகளுடன் 20 பொருட்களும் பரிசாக வழங்கப்படும். இதற்காக மொத்தம் 2.15 கோடி ரூபாய் செலவிடப்படும்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் நெய் கூட்டுறவு சங்கங்களில் இருந்து அரசால் கொள்முதல் செய்யப்படும்.
தற்போது பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்குவதற்காக, பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கும் பணியில், ரேசன் கடை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன்படி, தினமும் 150 முதல் 200 பேர் மட்டும் பரிசு பொருட்களை வாங்கும் வகையில், டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.
நாளை முதல் பொங்கல் வரை இந்த பணி நடைபெற இருக்கிறது. டோக்கன் வாங்க தவறியவர்கள் மற்றும் டோக்கனில் உள்ள தேதியில் பொருட்கள் வாங்க முடியாதவர்கள், 10ஆம் தேதிக்கு மேல் ரேஷன் கடைக்கு சென்று வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோயால் மக்களில் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர், மேலும் வருமானத்தில் சரிவைக் கண்டனர். இந்நிலையில் தான் சாமானிய மக்களின் நலன்கருதி, பொங்கல் பரிசுத் திட்டத்தை முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/pongal-gift-2022-lets-go-to-the-ration-shop-by-this-date/