செவ்வாய், 4 ஜனவரி, 2022

மோடியின் வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

 தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் தைத் திருநாள் பொங்கள் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி ஜனவரி 12ம் தேதி தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைக்க மதுரை வருகிறார். பிரதமர் மோடி வருவதையொட்டி, தமிழக பாஜக ‘மோடி பொங்கல்’ என பிரமாண்ட விழாவை ஏற்பாடு செய்து வருகிறது. பிரதமர் மோடியின் வருவதால் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விகளும் பார்வைகளும் எழுந்துள்ளன.

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி ஜனவரி 12ம் தெதி தமிழகம் வருகிறார். பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார்.

தமிழக பாஜக சார்பில், மதுரையில் ஜனவரி 12ம் தேதி நடைபெறும் ‘மோடி பொங்கல்’ நிகழ்ச்சியில் மோடி பங்கேற்பார் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மோடி பொங்கல்’ விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய மாநில பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தலைமையில் ஒருங்கிணைந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 7 ஆம் தேதி முதல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாநிலத்தில் கட்சி மண்டல அளவில் சிறப்பு பொங்கல் கொண்டாட்டங்களை நடத்த கட்சி திட்டமிட்டுள்ளது. பாஜக ஏற்பாடு செய்துள்ள இந்த கொண்டாட்டம் ஜனவரி 12ம் தேதி மதுரையில் நிறைவடைய உள்ளது. மதுரையில் நடைபெறும் விழாவில் பிரதமர் பங்கேற்பார் என்று கரு.நாகராஜன் கூறினார்.

விழாவை பிரமாண்டமாக நடத்த நாட்டுப்புற கலைஞர்கள் வரவழைக்கப்படுவார்கள். பொங்கல் வைக்க குறைந்தது 10,000 பெண்களை அழைத்து வர திட்டமிட்டுள்ளோம். இது மாநிலத்தில் ஒரு மெகா நிகழ்வாக இருக்கும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக கட்சி தொண்டர்களின் நம்பிக்கையை உயர்த்தும் நோக்கத்தில் மோடி பொங்கல் விழா நடத்தப்படுகிறது என்று பாஜகவினர் கூறுகின்றனர்.

இதனிடையே, கடந்த காலங்களில் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோதெல்லாம், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருப்புக் கொடி காட்டி, ‘கோ பேக் மோடி’ என்ற ஹேஷ்டேக்கில் சமூக ஊடகங்களில் டிரெண்டிங் செய்தனர். ஆனால், இந்த முறை பிரதமர் மோடியை வரவேற்க திமுக தயாராகி வருகிறது.

அண்மையில், திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், “மோடி எங்களுக்கு எதிரி அல்ல. மோடி எங்கள் விருந்தினராக வருகிறார். அவருக்கு ஏன் கருப்புக் கொடி காட்ட வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

திமுக மகளிரணி செயலாளரும், எம்.பி.யுயுமான கனிமொழி, தமிழக அரசின் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருவதால், அவரை திமுக வரவேற்கிறது. பிரதமர் மோடியை வரவேற்பது நம் கடமை. அரசியல் கருதியல் என்பது வேறு என்று கூறினார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால், நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிராக, போராட்டங்கள் நடத்துவது குறித்து, கட்சியால் முடிவெடுக்க முடியவில்லை என்று கூறினார்.

கடந்த காலங்களில் மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டது போல், போராட்டங்கள் நடத்துவதற்கு உங்கள் கட்சி திட்டமிட்டுள்ளதா என்ற கேள்விக்கு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கூட்டணிக் கட்சிகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று வைகோ கூறினார்.

கடந்த காலங்களில் பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்தபோது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும் அதன் கூட்டணி கட்சிகள்ம் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், தற்போது மாநிலத்தில், திமுக ஆளும் கட்சியாக இருப்பதால், தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைக்க தமிழகம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க வேண்டிய நிலையில் திமுக தலைமை உள்ளது.

பாஜக மற்றும் பிரதமர் மோடியை எதிர்த்து வந்த திமுக, இப்போது ஆளும் கட்சியாக இருந்து வரவேற்பதால் கூட்டணி கட்சிகளும் அதே சூழலை பின்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பிரதமர் மோடியின் தமிழகம் வருகை தமிழகத்தில் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

source https://tamil.indianexpress.com/tamilnadu/pm-narendra-modi-madurai-visits-can-change-tamilnadu-politics-dmk-and-its-allies-392010/