காளை மாடு முதல் மாத்திரை வரை; கிட்டத்தட்ட அனைத்தையும், அனைவரையும் “கவர்” செய்யும் வகையில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அறிவித்துள்ளனர் உ.பி. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள். இலவச மின்சாரம், கொரோனா நிவாரணம் என்று பொதுவான சில வாக்குறுதிகளை சில கட்சியினர் வெளியிட்டுள்ளனர். ஆனால் சமாஜ்வாடி கட்சி மேலும் ஒரு படி மேலே போய் மிகவும் சாமர்த்தியமான வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி, டெல்லியின் எல்லைப் பகுதியை பங்கிட்டுக் கொள்ளும் உ.பி. மாவட்டங்களில் தாக்கங்களை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது. செப்டம்பர் மாதம் உ.பி. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஏற்கனவே நிலுவையில் இருக்கும் மின்சார கட்டணம் தள்ளுபடி போன்ற அறிவிப்புகளை வெளியிட்டது. மேலும் வேலையின்றி இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளார் அரவிந்த் கெஜ்ரிவால், 18 வயதிற்கு மேலே உள்ள பெண்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்றும், அயோத்தி புனித பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் உ.பி. தலைமை செய்தித் தொடர்பாளர் வைபவ் மகேஷ்வரி, “அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் தீவிர ஆய்வுக்கு பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மாநில கருவூலத்திற்கு இலவச மின்சாரம், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவி தொகை, பெண்களுக்கு மாதம் ரூ. 1000 போன்ற திட்டங்கள் மூலம் அதிக சுமை ஏற்படும். ஆனாலும் ஆம் ஆத்மி கட்சி சிறப்பாக தங்களின் திட்டங்களை செயல்படுத்தும் என்பதால் இந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
சமாஜ்வாடி கட்சி வீடுகள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தும் முதல் 300 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணம் இல்லை என்று அறிவித்துள்ளாது. மேலும் மாடுகள் தாக்கியோ அல்லது சைக்கிள் விபத்து ஏற்பட்டு இறந்தாலோ, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. சைக்கிள் சின்னத்தில் போட்டியும் சமாஜ்வாடி கட்சி, சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வந்த மாட்டிறைச்சி கடைகள் அனைத்தும் மூட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட காரணத்தால் தற்போது தெருவில் கால்நடைகள் சுற்றி வருவது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று பாஜக அரசின் நடவடிக்கைகளை சுட்டிக் காட்டினார் அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ். சமாஜ்வாடி கட்சியினரின் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசங்கள் இருக்காது என்று மக்கள் நம்பவேண்டும் என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சி முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தேர்தலில் பிரச்சாரம் செய்து வந்தோடு, அவர்களை முன்னிலைப்படுத்தி தேர்தல் வாக்குறுதிகளையும் அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி 12ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் ஸ்மார்ட் போன், கல்லூரி மாணவிகளுக்கு ஸ்ஜூட்டு, பெண்க்களுக்கு இலவச பேருந்து பயணம், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வருடத்திற்கு மூன்று இலவச சிலிண்டர்க்கள் போன்றவை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ. 10 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு, 50%க்கு மேல் பெண்களை கொண்டு நடைபெறும் வர்த்தகம் மற்றும் தொழில்களுக்கு வரி விலக்கு மற்றும் சிறப்பு சலுகளை வழங்கப்படும் என்று கூறினார். தற்போதைய பாஜக அரசின் ஊதாரித்தனத்தையும் ஊழலையும் நிறுத்தினாலே காங்கிரஸ் கட்சியினரால் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலும் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுரேந்திர ராஜ்புத் கூறியுள்ளார்.
இளைஞர்களை மையப்படுத்தி தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை தயார் செய்துள்ளது பாஜக. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினமான டிசம்பர் 25ம் தேதி அன்று முதல்வர் யோகி ஆதித்யநாத் மாணவர்களுக்கு டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்களை வழங்கினார். இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடி மாணவர்கள் பயனடைவார்கள் என்று பாஜக கூறியுள்ளது. எதிர்க்கட்சியின் தங்களின் வாக்கு வங்கிகளை இழந்துவிட்டதால் இலவச திட்டங்கள் என்ற பெயரில் அரசியல் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த இலவசங்கள் ரவுடிதனத்தையும் மாஃபியா அரசையும் தான் கொண்டு வருமென மக்களுக்கு நன்றாக தெரியும் என்று பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ராகேஷ் த்ரிபாதி கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/explained/uttar-pradesh-assembly-elections-poll-promises-from-parties-392077/