ஞாயிறு, 9 ஜனவரி, 2022

நீட்: ஆளுநருக்கு எதிராக அனைத்துக் கட்சி தீர்மானம்

 8 1 2022 இன்று தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நீட் தேர்வு தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

தீர்மானம்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் வகையில் உள்ளது. நீட் தேர்வு, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் கூட்டாட்சி தத்துவத்தை சீரழிப்பதாகவும் உள்ளது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு, ஆளுநர் அனுப்பாமல் இருப்பது சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு ஏற்புடையதல்ல என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜக வெளிநடப்பு

நீட் தேர்வால் எந்த விதமான பாதிப்பும் இல்லை. நீட் தேர்வு 10 மொழிகளில் நடைபெற்று வருவதால் பல மாநில மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். நீட் விலக்கு கோரும் சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்ட போது பாஜகவின் கருத்தை முழுமையாக கேட்கவில்லை. மத்திய அரசு மாநிலங்கள் மீது நீட் தேர்வை திணித்திருப்பதாக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது என்று கூறி வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார்.

மீண்டும் அனைத்துக் கட்சி நடைபெறும் – சுகாதாரத்துறை அமைச்சர்

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நடப்பாண்டு மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறினார். நீட் விலக்கு தொடர்பாக சட்ட வல்லுநர்களின் ஆலோசனைக்கு பிறகு மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும். தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநில மக்களும் நீட் தேர்வுக்கு எதிராக உள்ளனர். மாநில அரசு நிதியில் இருந்து நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை உரிமையை மத்திய அரசு பறித்து விட்டது . இது 12 ஆண்டு கால பள்ளிக் கல்வியை அர்த்தமற்றதாக மாற்றுகிறது என்றும் அவர்களின் பள்ளிக் கல்வியால் எந்த விதமான பயனும் இல்லை என்ற நிலையை உருவாக்குகிறது என்றும் கூறினார் அமைச்சர்.

நீட் விலக்கு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரை தமிழ்நாடு அனைத்துக் கட்சி குழு மீண்டும் சந்திக்க முடிவு செய்துள்ளது. நீட் விலக்கு பெற சட்ட ரீதியான நடவடிக்கைகளை அனைத்து கட்சிகளும் இணைந்தே மேற்கொள்ளும் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

யார் யார் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றனர்?

இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், திமுக சார்பில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, அதிமுக சார்பில் டாக்டர் சி. விஜயபாஸ்கர்ம் காங்கிரஸ் கட்சி சார்பில் கு. செல்வபெருந்தகை, பாஜக சார்பில் வானதி சீனிவாசன், பாமக சார்பில் ஜி.கே. மணி, சி.பி.ஐ கட்சி சார்பில் டி. ராமச்சந்திரன், சி.பி.ஐ(எம்) சார்பில் வி.பி. நாகை மாலி, மதிமுக சார்பில் டாக்டர் டி.சதன் திருமலைக்குமார், விசிக சார்பில் சிந்தனைச்செல்வன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன், மனித நேயம் கட்சி சார்பில் எம்.எச். ஜவாஹிருல்லா, புரட்சி பாரதம் சார்பில் பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/resolution-passed-in-all-party-meet-on-exemption-from-neet-394221/