வெள்ளி, 7 ஜனவரி, 2022

சட்டப்பேரவையில் நேற்று வெளிநடப்பு… இன்று அமைதி…

 6 1 2022 தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையைப் புறக்கணித்து நேற்று வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று அமைதியாக இருந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டது குறித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் எந்த கேள்வியும் எழுப்பவில்லை என்பது தமிழக அரசியல் களத்தில் ஆச்சரியங்களை எழுப்பியுள்ளன.

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 5ம் எதேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையின்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தான் தயார் செய்து வந்திருந்த உரையைப் பேசத் தொடங்கினார். ஆனால், எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. அம்மா கிளினிக் திட்டம் செயல்படுத்தப்படாதது, முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை உள்ளிட்ட விவகாரங்களைக் குறிப்பிட்டு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் உரையைப் புறக்கணித்து சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையில், கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக இருக்கிறது என்று புகழாரம் சூட்டினார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று கூறினார்.

இதையடுத்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2 நாட்கள் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக் கணக்கில் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யத் தேடி வந்த நிலையில் நேற்று (ஜனவரி 5) மாலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப் பேரவை இன்று மீண்டும் கூடியது. சட்டப் பேரவையில் நேற்று வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று பேரவையில் ராஜேந்திர பாலாஜி கைது குறித்து தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால், இது போல, எதிர்க்கட்சிகளில் முன்னாள் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்படுகிறார் என்றால், சட்டப்பேரவையில் சலசலப்பை ஏற்படுத்துவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதனால், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சட்டப் பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து சட்டப்பேரவை அலுவல்களில் பங்கேற்றனர். அதுமட்டுமல்லாமல் ஓ.பன்னீர்செல்வம், பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ்பாண்டியன், கடம்பூர் ராஜூ, ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பலர் அரசிடம் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை மட்டும் எடுத்துரைத்தனர்.

சட்டப்பேரவையில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன், “கோவையிலிருந்து பொள்ளாச்சியை பிரித்து மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, கிணத்துக்கடவு உள்ளிட்ட வட்டங்களை இணைத்து பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். பொள்ளாச்சி ஜெயராமனுக்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கடந்த 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் முக்கியப் பதவியில் இருந்த ஜெயராமன் திமுக அரசு மீது நம்பிக்கை கொண்டு கோரிக்கை வைத்ததற்கு நன்றி எனக் கூறினார். இதனால், உறுப்பினர்கள் பலரும் சிரித்து சிரிப்பலையை எழுப்பினார்கள்.

பின்னர், இது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை செய்து உரிய தகவலை வெளியிடுவார் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

2022ம் ஆண்டுக்கான முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் நேற்று ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள், இன்றைய கூட்டத்தில் அவையில், ராஜேந்திர பாலாஜி கைது உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவரும் அமைதியாக இருந்து அலுவல் கூட்டத்தை நடத்தியது தமிழக அரசியல் களத்தில் ஆச்சரியங்களை எழுப்பியுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/aidmk-mlas-maintain-silence-about-rajendra-balaji-arrest-in-house-393403/