7 5 2022

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மிக ஆபத்தான இயக்கம் என்று கூறிய ஆளுநர் ஆர்.என். ரவி, அரசியல் உள்நோக்கத்துடன் பேசுவதாகவும் ஆளுநரின் பேசியது ஆர்.எஸ்.எஸ் குரல் போல இருந்தது என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மறைந்த லெப்டினண்ட் ஜெனரல், சப்ரோடா மித்ரா எழுதிய ‘THE LURKING HYDRA’ என்ற புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புத்தகத்தை வெளியிட்டு பேசிய அவர் “இந்தியாவில் சமூக அமைதியைக் குலைக்க சில அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன என்று குற்றம் சாட்டினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் என்று பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த ஆளுநர் ஆர்.என். ரவி, “இந்த அமைப்பு மனித உரிமைகள் அமைப்புகள் மாணவர்கள் முகமூடி அணிந்து செயல்பட்டு, ஆஃப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளுக்கு சண்டையிட ஆட்களை அனுப்பி வைப்பதாகக் குற்றம் சாட்டினார். நாட்டை சீர்குலைப்பதே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நோக்கம். பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயல்படுகிறது. அரசியல் லாபத்திற்காக வன்முறையைத் தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே. அரசியல் லாபத்துக்காக வன்முறையைத் தூண்டுவதை ஏற்க முடியாது. பயங்கரவாதத்தில் ஈடுபட்டால், அதற்கான பதிலடியை அவர்கள் பெறுவார்கள்” கடுமையாக விமர்சித்தார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மிக ஆபத்தானது என்று குற்றம் சாட்டிய ஆளுநரின் கருத்துக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகி ஷேக் முகமது அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநரின் பேச்சு தமிழக அரசுக்கு மேலும் ஒரு அவதூறை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு உடனே ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று ஷேக் முகமது அன்சாரி வலியுறுத்தினர்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தமிழ்நாடு தலைவர் ஷேக் முகமது அன்சாரி கூறியதாவது: “இந்தியா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து போராடும் ஒரு அமைப்பாக செயல்பட்டு வருகிறது. யார் என்ன சொன்னாலும் மக்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை நன்றாக புரிந்து வைத்துள்ளனர். இந்த ஆட்சியில் நல்லவர்களை கெட்டவர்களாகவும் கெட்டவர்களை நல்லவர்களாகவும் சித்தரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கொரோனா காலத்தில் இறந்த உடல்களை யாருமே தொடுவதற்கு முன்வராத சூழலில் முதல்முதலாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உறுப்பினர்கள் அனைத்து மத உடல்களையும் அவர்களின் இறுதி சடங்கு நடைமுறைப்படி நடத்தினார்கள்.
அதனால், தமிழக ஆளுநர் இதுபோன்று கருத்து தெரிவித்திருப்பது ஆர்எஸ்எஸின் குரலாக அவர் பேசியதை போல்தான் இருந்தது. ஆர்எஸ்எஸ், பாஜகவும் வன்முறைக்கும் எத்தனை சம்பந்தம் உள்ளது என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. ஆனால், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குறித்து தீவிரவாத அமைப்பாக சித்தரிக்க என்ன ஆதாரம் உள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
சிஏஏ, ஹிஜாப் உள்ளிட்ட விவகாரங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தூண்டுதலின் பெயரில் போராட்டங்கள் நடைபெற்றதாக சித்தரிக்க நினைக்கிறார்கள். அப்படி சித்தரிக்க நினைப்பது தவறில்லை மக்கள் பிரச்சனைக்காக முன்னின்று போராடவில்லை என்றால் தான் தவறு.
அந்தவகையில், எங்களை மோசமானவர்கள் என பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்பு கூறினால் அது உண்மைதான். அவர்கள் செய்யும் தவறான செயல்களுக்கு நாங்கள் முட்டுக்கட்டையாக இருப்பதால் அவர்கள் அப்படி கூறுவார்கள்.
அரசியல் உள்நோக்கத்துடன் பேசிவரும் ஆளுநர், தொடர்ந்து தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருகிறார். ஆளுநரின் பேச்சு தமிழக அரசுக்கு மேலும் ஒரு அவதூறை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு உடனே ஆளுநரை திரும்ப பெற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
source https://tamil.indianexpress.com/india/jammu-kashmir-delimitation-commission-issues-final-notification-450721/