1 1 2023
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்ற பெண் கடந்த சில நாட்களாக மாயமான நிலையில், இன்று (ஜனவரி 1) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். போலீசார் உடனடியாக உடற்கூராய்வு நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், ஏன் இந்த அவசரம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி ஈஷா யோகா மையத்திற்கு சென்ற இளம் பெண் சுபஸ்ரீ வீடு திரும்பவில்லை என்று கணவர் புகார் கொடுத்திருந்தார். காவல்துறை 4 தனி குழுக்கள் அமைத்து விசாரணை மேற்கொண்டார்கள். இந்த நிலையில் இன்று (ஞாயிறன்று) அவரது உடல் ஈஷா வளாகத்திற்கு அருகாமையில் உள்ள கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் உடற்கூராய்வு நடத்த திட்டமிட்டனர்.
இந்நிலையில் போலீசார் அவசர அவசரமாக பெண்ணின் பிரேத பரிசோதனையை செய்ய முடிவெடுத்ததன் மர்மமென்ன? என கேள்வி எழுப்பியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வருவாய்த்துறை மற்றும் மாவட்ட நீதிபதிகள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய வலியுறுத்தியுள்ளது.
காவல்துறை அவசர அவசரமாக உடற்கூராய்வு செய்திட முயற்சிக்கிறார்கள். இந்த நடைமுறை தவறானது. வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நீதிபதியின் விரிவான விசாரணைக்குப் பின்பே உடற்கூராய்வு செய்ய வேண்டும் என கோவை மாவட்ட காவல்துறையை கேட்டுக் கொள்கிறோம்.
கடந்த 12 நாட்களாக என்ன நடந்தது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது தமிழக அரசு மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடமை என்பதையும் வலியுறுத்துகிறோம் என சி.பி.எம் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் வலியுறுத்தியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/kovai-cpim-questions-why-urgency-in-isha-yoga-woman-post-mortem-568922/