வியாழன், 20 ஜூலை, 2017

ஒரே ஆண்டில் நாடு முழுவதும் 11,400 விவசாயிகள் உயிரிழப்பு! July 20, 2017

ஒரே ஆண்டில் நாடு முழுவதும் 11,400 விவசாயிகள் உயிரிழப்பு!


கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 11,400 விவசாயிகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங், 2016ம் ஆண்டில் மட்டும் நாட்டில் 11,400 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விவசாயிகளின் தற்கொலையை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் அமைச்சர் ராதாமோகன் சிங் குறிப்பிட்டார். 

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க மத்திய அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிரதித்யா ஸ்கிண்டியா குற்றம்சாட்டிய பேசியதற்கு பதிலளித்து பேசியபோது ராதாமோகன் சிங், இந்த தகவலை வெளியிட்டார். மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையை 1.5 மடங்கு உயர்த்தி தருவதாக 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே வாக்குறுதி அளித்திருந்ததை சுட்டிக்காட்டி அவர் பேசினார். பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு ரூ.3,560 கோடி பிரிமியம் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் ராதாமோகன் குறிப்பிட்டார்.

பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களே அதிகம் பயன்பெறுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளித்த ராதாமோகன்சிங், பயிர்களை காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இதனை பயன்படுத்தி பலனடைய வேண்டாம் என நினைக்கும் மாநில அரசுகள் இதற்கென தனி நிறுவனங்களை தொடங்கிக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.

Related Posts: