100% எம்.பி.பி.எஸ்/ பி.டி.எஸ் இடங்களை தெலுங்கானா மாணவர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு செய்வதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரித்த தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி அபிநந்த் குமார் ஷவிலி, தெலுங்கானா அரசு மற்றும் மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பினார்.
தெலுங்கானாவில் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாகத்திற்கான அனைத்து எம்.பி.பி.எஸ் இடங்களையும் உள்ளூர் மாணவர்களுக்கு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. இதன்மூலம், ஆண்டுக்கு 1,820 எம்.பி.பி.எஸ் சீட்டுகள் தெலங்கானா மாணவர்களுக்கு உறுதி செய்யப்பட்டது.
இந்தநிலையில், இந்த அரசாணைக்கு எதிராக தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மனுதாரர், தெலுங்கானா மாணவர்களுக்கு பிரத்யேகமாக மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு செய்வது சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது என்று வாதிட்டார். NEET 2023 தேர்வில் தகுதி பெற்றுள்ள அவரது மகள், தெலுங்கானாவில் நடைபெறும் கவுன்சிலிங்கில் கலந்துக் கொள்ள விரும்பியுள்ளதால், தெலுங்கானாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 100% இடஒதுக்கீட்டிற்கான விதிகளை அரசாங்கம் அறிமுகப்படுத்திய GO Ms. எண் 72 இன் செயல்பாட்டை உயர் நீதிமன்றம் நிறுத்த வேண்டும் என்று மனுதாரர் கோரினார்.
இதனையடுத்து, இந்த விவகாரத்தில் 4 வாரங்களுக்குள் எதிர் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு தெலுங்கானா மருத்துவக் கல்வி இயக்குநர், தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் கலோஜி நாராயணராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
source https://tamil.indianexpress.com/education-jobs/neet-counselling-2023-hc-notice-to-telangana-100-percent-mbbs-seats-to-state-students-722346/