ஜூலை 20 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
திமுக தேர்தல் வாக்குறுதியின்படி வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல், பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
அதன்படி மகளிர் உரிமைத் தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்திற்கும் மேல் உள்ளோருக்கு ரூபாய் 1,000 கிடையாது என அரசு தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழக அரசு வெளியிட்டது.
இதில் விண்ணப்பதாரரின் பெயர், திருமண நிலை, தொலைபேசி எண், மின் இணைப்பு எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண், வாடகை வீடா அல்லது சொந்த வீடா என்பன உள்ளிட்ட 10 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. மேலும் 18 வயதுக்கு மேல் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், சொத்து விவரம், நில உடமை மற்றும் வாகன விவரங்களும் கேட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் 20-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
விண்ணப்ப படிவங்கள் ரேஷன் கடை ஊழியர்கள் வாயிலாக, கார்டுதாரர்களுக்கு வரும் 20 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படவுள்ளன.
அந்த விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து டோக்கனில் உள்ள தேதியில் நேரத்தில் ரேஷன் கடையில் ஒப்படைக்க வேண்டும். அவற்றை மாவட்ட ஆட்சியர்கள் குழு ஆய்வு செய்து பயனாளிகளை கண்டறியும்.
விண்ணப்பம் வழங்கும் பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் தவிர, வெளி நபர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்றும், வெளிநபர்களால் விண்ணப்பங்கள் வழங்கப்படக் கூடாது என்றும் மண்டல இணைப் பதிவாளர்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/kalaignar-magalir-urimai-thogai-scheme-application-form-magalir-urimai-thogai-723230/