வியாழன், 13 ஜூலை, 2023

இமாச்சலப் பிரதேச வெள்ள பாதிப்பால் 40 பாலங்கள் சேதம்…! உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆக அதிகரிப்பு….!

 13 7 23


இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்திர பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத அளவு மழை பெய்து வருகிறது.  அதேபோல இமாச்சல பிரதேசத்தில் இடைவிடாத மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரவி, பியாஸ், சட்லுஜ், ஸ்வான் மற்றும் செனாப் உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மணாலி, குலு, கின்னவுர் மற்றும் சம்பா ஆகிய இடங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் கடைகள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சல பிரதேசத்தில் பொதுமக்கள்  வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தொலைபேசி இணைப்பு, இணைய சேவை இணைப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இமாச்சல பிரதேசம் மற்றும் டெல்லிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.


இந்த நிலையில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவால், இமாச்சலப் பிரதேச மாநிலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 1300 சாலைகள், 40 பாலங்கள் சேதமடைந்துள்ளன. 79 வீடுகள் தரைமட்டமாகின. சிம்லா – மனாலி, சண்டிகர் – மனாலி, சிம்லா – குல்கா தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசியப் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பால் 88 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் 16 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://news7tamil.live/40-bridges-damaged-due-to-himachal-pradesh-floods-death-toll-rises-to-88.html

Related Posts: