நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. வேட்பாளருமான ஆ.ராசா புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது நீலகிரி மக்களவை தொகுதியில் எனது வெற்றி பிரகாசமாக உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய ஆ.ராசா, “நீலகிரியில் எனது வெற்றி பிரகாசமாக இருக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 3 ஆண்டுகால சாதனை மற்றும் நீலகிரி மக்கள் சாதி,மதத்துக்கு அப்பாற்பட்டவர்கள்” என்றார்.
தொடர்ந்து நெறியாளர் நீங்கள் மோடி மீது மதவாதம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை வைக்கிறீர்கள். ஆனால் உங்கள் மீது அந்தக் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே எனக் கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஆ.ராசா, “என் மீது என்ன ஊழல் குற்றச்சாட்டு உள்ளது” எனப் பதில் கேள்வியெழுப்பினார். இதையடுத்து நெறியாளர் நேற்று கூட அண்ணாமலை உங்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளாரே என்றார்.
இதற்குப் பதிலளித்த ஆ.ராசா, “அண்ணாமலை ஒரு ஐ.பி.எஸ் ஆபிசர். அவர் அறியாமையில் பேசுகிறார் என நான் சொல்லக் கூடாது. ஆனால் அறிவிலிதனமாக பேசுகிறார்.
அவர் முதலில் 2ஜி தீர்ப்பை படிக்க வேண்டும். இந்த வழக்கில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நான் எதற்கும் தயார். தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தை என்ன சொல்ல?
அமலாக்கத் துறை அஜித் பவார் மீது ரூ.70 ஆயிரம் கோடி ஊழல் வழக்கு தொடர்ந்தது. அவர் கட்சி மாறியதும் அந்த ஊழல் குற்றச்சாட்டு காணாமல் போனது.
தொடர்ந்து, 2ஜி தொடர்பான கேள்விக்கு, 2ஜி குறித்து பேசும் அண்ணாமலை 5ஜி இதர ஊழல்கள் பேச தயாரா? எனவும் கேள்வியெழுப்பினார். மேலும் அதிமுகவினர் 2ஜி விவகாரத்தில் எதுவும் தெரியாமல் பேசுகின்றனர்” என்றார்.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நீலகிரி மக்களவை தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஆ. ராசாவை எதிர்த்து பா.ஜனதா சார்பில் எல். முருகன் போட்டியிடுகிறார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/a-raja-challenged-annamalai-to-talk-about-the-5g-scandal-4482257