திங்கள், 15 ஏப்ரல், 2024

“பணவீக்கம், வேலையின்மை என்ற வார்த்தையே இல்லை”

 

பாஜகவின் தேர்தல் அறிக்கை மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் உரையில் பணவீக்கம், வேலையின்மை என்ற வார்த்தையே இல்லை என்று காங். மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட தேசிய கட்சிகள் நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

ஏற்கனவே பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில், ஆளுங்கட்சியான பாஜக எப்போது தேர்தல் அறிக்கையை வெளியிடும் என்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.  இந்நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று (ஏப். 14) டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை “மோடியின் கேரண்டி” என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்ற இந்த தேர்தல் அறிக்கைக்கு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து காங்கிரஸ்  மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது X தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது :

“பாஜகவின் தேர்தல் அறிக்கை மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் உரையில் பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகிய இரண்டுமே இடம்பெறவில்லை. மக்களின் வாழ்க்கை தொடர்பான மிக முக்கியமான பிரச்னைகளை கூட விவாதிக்க பாஜக விரும்பவில்லை.
ஆனால், I.N.D.I.A.  கூட்டணியின் நோக்கம் மிகவும் தெளிவானது. அரசுப் பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு மற்றும் படித்த ஒவ்வொரு இளைஞருக்கும் நிரந்தர வேலை உறுதி”

இவ்வாறு காங். மூத்த தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.


source https://news7tamil.live/bjps-election-manifesto-doesnt-mention-inflation-unemployment-cong-senior-leader-rahul-gandhi-criticism.html