கண் பார்வையை இழப்பவர்களுக்கு,மனிதக் கருவில் இருந்து எடுக்கப்பட்ட குருத்துச் செல்களை பயன்படுத்தி அவர்களின் பார்வையை மீட்கும் புதுமையான முயற்சியை பிரிட்டன் மருத்துவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.
60 வயதான பெண்மணி ஒருவர் Age-related macular degeneration (AMD)எனப்படும் பார்வைக் குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டு வந்தார்.இந்த நோயால் கண்ணின் மையப்புள்ளியில் இருந்து படிப்படியாக கண்ணின் மற்றைய பகுதிகளும் இந்த நோய் பரவி, முழுவதுமாக கண் அதன் பார்வையை இழந்துவிடும்.
அவரின் கண்ணின் மையப்பகுதியில் ஏற்பட்ட இந்தக் குறைப்பாட்டை போக்குவதற்கு, அவரின் கண்ணின் விழித்திரையின் பிற்பகுதியில் அறுவை சிகிச்சை மூலம் அவரின் கருவில் இருந்து எடுக்கப்பட்ட குருத்து செல்கள் பொருத்தப்பட்டது.
அந்த செல்கள் உரிய இடத்தில் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.அதேசமயம், இந்த குருத்துச்செல்கள் அந்த பெண்மணியின் பார்வையிழப்பை தடுத்து அவரது பார்வையை மேம்படுத்துமா என்பது குறித்து தற்போதைய நிலையில் எந்த உறுதியான பதிலையும் மருத்துவர்களால் கொடுக்க முடியவில்லை.
இந்த ஆண்டின் முடிவில் தான் அது குறித்து தங்களால் கணிக்க முடியும் என்று இந்த பரிசோதனையை மேற்கொண்டிருக்கும் மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பெண்மணியைத் தவிர, இதே நோயால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேருக்கும் இதே பரிசோதனை முறையிலான அறுவை சிகிச்சைகள் செய்யப்படவிருக்கின்றன.