வியாழன், 12 நவம்பர், 2015

பிரான்ஸ் மருத்துவ மேதை மாரிஸ் புகைல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சம்பவம்

Mohideen Jailani's photo.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இந்த உண்மைச் சம்பவத்தை முழுமையாகப் படிப்பதோடு, அதிகம் பரப்புங்கள். படிக்கத் தவறிவிடாதீர்கள்.
பிரான்ஸ் மருத்துவ மேதை மாரிஸ் புகைல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சம்பவம்
(அறப் நியூஸ் பத்திரிகையில் இருந்து அவ்பர் முஸ்தபா)
பிர்அவ்னின் பதப்படுத்தப்பட்ட உடல் (மம்மி), 1980தின் கடைசிப்பகுதியில் எகிப்திலிருந்து பிரான்ஸுக்கு ஆய்வுக்காகக் கொண்டுவரப்பட்டது. இந்த ஆய்வு அணியின் தலைமை அதிகாரியாக டொக்டர் மாரிஸ் புகைல் அவர்கள் இருந்தார்கள்.
பிரான்ஸ் நாட்டில் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்த, டொக்டர் மாரிஸ் புகைல் அவர்கள் அவரின் குடும்பத்தை அதிகம் நேசிப்பவாராக இருந்தார்.
இரண்டாம் நிலைக்கற்றலை சிறப்பாக முடித்ததும் பிரான்ஸில் உள்ள பல்கலைக்கழக, மருத்துவபீடத்தில் இணைந்து கல்வியைத் தொடர்ந்தார். நல்ல பெறுபேறுகளுடன் மருத்துவப் படிப்பில் உயர் சித்திபெற்ற அவர், மிகவும் புகழ்மிக்க, புத்திக் கூர்மையான, ஒர் அறுவை சிகிச்சை நிபுணராகவும், மக்கள் வியக்கும் விஞ்ஞானியாகவும் பிரபல்யமானார். இப்படி வாழ்ந்த இக்கல்விமானின் வாழ்கையை, ஒரு பழைய வரலாற்றுக் கதை முழுமையாக திருத்தி அமைக்கும் என்பதை அவரோ, அவரின் குடும்பமோ கனவிலும் நினைத்திருக்க வில்லை.
தொல்பொருள் ஆராய்ச்சியிலும், மரபுரிமை ஆராய்ச்சியிலும், அதிக அக்கறை உள்ள பிரான்ஸ் அரசு, எகிப்தின் புராதன மன்னன், பிர்அவ்னின் பதப்படுத்தப்பட்ட உடலை ஆராய்ச்சி செய்ய விரும்பி, அதன் விருப்பத்தை எகிப்திடம் தெரிவித்தது. அந்த வேண்டுகோளை ஏற்ற எகிப்திய அரசு அதற்கு இணக்கம் தெரிவித்தது.
அதன் அடிப்படையில், பண்டைய எகிப்தின்; அகம்பாவம் கொண்ட, கொடுங்கோல் ஆட்சி புரிந்த மன்னனும், கொடுமைகளுக்குப் பேர்போனவனுமான பிர்அவ்னின் பதப்படுத்தப்பட்ட உடல், 1980களின் கடைசிப் பகுதியில், ஆய்வுக்காக விமான மூலம் பிரான்ஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விமானம் பிரான்ஸின் தரையைத் தொட்டதும் ஒர் அதிசயம் அங்கே அரங்கேறியது.
விமானம் வந்திறங்கியதும் அதற்கு அருகாமையில், அதன் ஓடுதளத்தில், பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியும், அவரின் அமைச்சர்களும், உயரதிகாரிகளும் வரிசையாக நின்று, பிர்அவ்ன் உயிரோடிருப்பது போல், அவனுக்குத் தலைவணங்கினார்கள். அரச ராஜமரியாதையுடன் இந்த வரவேற்புச் சடங்கு நடந்து முடிந்ததும், பிர் அவ்னின் உடல் செங்கம்பள வரவேற்புப் பெற்றது. (குறிப்பு: பிர்அவ்ன் ஒரு அரசனாக இருந்தான் என்பதற்காகவே, பிரான்ஸ் அரசு அவனின் உடலுக்கு அரச மரியாதை அளித்தது)
இவ் வரவேற்பைத் தொடர்ந்து, பிர்அவ்னின் உடல், பிரான்ஸின் நினைவு மையத்தின் ஒரு பிரத்தியேக பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு; உலகப்புகழ் பெற்ற, அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், உடற்கூறியல் விஞ்ஞானிகள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எல்லோரும் ஒர் அணியாகி; பிர்அவ்னின் மம்மிக்குள் மறைந்திருக்கும் மாயத்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இவ்வாராய்ச்சியில், சிரேஷ்ட அறுவைச் சிகிச்சை நிபுணரும், விஞ்ஞானியுமான, பேராசிரியர் மாரிஸ் புகைல் அவர்கள் இக்கூட்டணியின் தலைவராகவும், பொறுப்பாளராகவும் இருந்தார்.
இவ்வணி பிர்அவ்னின் உடலை தீவிரமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கையில், அதன் தலைவரின் (மாரிஸ் புகைலின்) சிந்தனை மட்டும் இன்னொரு சிக்கலை சீர்செய்ய வழி தேடியது. ....“பிர்அவ்ன் எப்படி இறந்தான்?”.... என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே அவரின் சிந்தனைக்குள் சிக்கிய முடிச்சாக இருந்தது. முடிச்சவிழ்க்கக் கடின முஸ்தீபுகள் செய்தார். விடாமுயற்சி அவரை முன்னோக்கி வழி காட்டியது, அவ்வழி உண்மையின் ஒளி காட்டியது, அதன் பிரகாசம் அவரின் சிந்தையைச் சிலிர்க்க வைத்தது. முடிச்சு மெல்ல மெல்ல அவிழ்ந்தது. அன்றைய இரவின் நடுநிசி நகர்ந்த பின்; பிர்அவ்னின் இறப்பின் இரகசியம், மாரிஸ் புகைல் அவர்களின் முழுமுயற்சியால் பரகசியமானது. சிக்கல் அவிழ்க்கப்பட்டது. சிந்தனை சீரானது!! அவருக்குள் ஆர்வம் ஆணிவேரிட்டது.
“அவனின் உடலில் இன்னும் உப்பு எஞ்சியிருப்பதால்; நிச்சயமாக இவன் கடல்நீரில் மூழ்கியே மரணித்திருக்க வேண்டும்” என்றும், “மூழ்கிய உடனேயே அவ்வுடல் மீட்கப்பட்டிருக்கிறது” என்றும், “இறந்த உடல் அழுகாமல் இருக்க, அது பதனிடப் படுவதற்கான செயற்பாடுகள் கடுகதியாகவே நடந்தேறி இருக்கிறது” என்றும் உறுதிபடச் சொன்னார். அவரின் கண்டுபிடிப்பு உலகின் காதில் கனமாய்ப் போய் விழுந்தது.
நின்றுவிடவில்லை அவரின் சிந்தனை. தொடர்ந்தது.... இன்னுமொரு புதிர் புரிய, அவர் மூளை முயன்றது. அதுவோ “எகிப்தில் உள்ள மம்மிகளுக்குள்; பிர்அவ்னின் உடல் மட்டும், கடலுக்குள் மூழ்கியும், ஏன் எந்த சிதைவும் இல்லாமல் அப்படியே இருக்கிறது?” என்ற, ஒரு புதிய கேள்வி அவரின் அறிவுக்கு சவால் விடுத்தது. “பிர்அவ்னின் உடல் கடலுக்குள் இருந்து எடுக்கப்பட்டதா?” “எடுத்த மாத்திரத்திலேயே பதனிடப்பட்டாதா?” சிந்தனையில் ஆழ்ந்தார்! அப்போது அவர் அணியில் இருந்த ஒருவர் காதுக்குள்; “இதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை, முஸ்லிம்கள்; பிர்அவ்னின் உடல் கடலுக்குள் மூழ்கடிக்கப் பட்டதாகவே சொல்கிறார்கள்” என குசுகுசுத்தார்.
இதைக் கேட்ட கணமே, கடுமையுடன் நிராகரித்தார்! நம்ப மறுத்தார்!! அப்படியான ஒரு முடிவுக்கு வருவதாயின், மிகத்துல்லியமாகக் கணிக்கும், ஒரு நவீன கொம்பியூட்டரின் உதவி இல்லாமல் அது சாத்தியமாகாது என்றும் கூறினார். அவ்வணியில் மற்றொருவரோ, “இச்சம்பவம் முஸ்லிம்களின் குர்ஆனில்; “அவனுடைய உடல் அழியாமல் பாதுகாக்கப்படும்” என்று கூறப் பட்டிருப்பதாகச் சொன்னார். இவ்வார்த்தைகள் அவரை மேலும் அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்திற்று!
அவரின் ஆச்சர்யங்கள் ஆவல்களை மேலும் தூண்டின! ஒன்றன் பின் ஒன்றாகக் கேள்விகள் கோர்த்தார் விடைகள் மாலையாய் வந்து விழுந்தன. வெறுமனே 200 வருடங்களுக்குள்; அதாவது,1898ல் தான் இந்த பதப்படுத்தப்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன, முஸ்லிம்கள் குர்ஆனை 1400 வருடங்களாக ஓதுகிறார்கள்! இந்தத் தரவுகள் குர்ஆனுக்குள் எப்படி வந்தன? எங்கிருந்து வந்தன? எனக்கேட்டார். பண்டைய எகிப்தியர்கள் அவர்களின் மன்னர்களினதும், பிரதானிகளினதும் இறந்த உடலை தைலமிட்டுப் பதப்படுத்தி வைக்கும் மரபை, அவ்வுக்தியை, ஓரிரு சகாப்தங்களுக் குள்ளேயே மனிதகுலம் அறிந்திருந்தது. மேலும், முஸ்லீம்களுக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லை. என்றும் உறுதிபடக் கூறினார்.
சக ஆய்வாளர்கள் குர்ஆனில் உள்ளதாகக் கூறிய; “உடல் மூழ்கடிக்கப்பட்ட பின்புதான் மீளப்பெறப்பட்டது” என்ற சம்பவமும், அதேவேளை கிறிஸ்தவர்களின் வேத நூலான பைபிளில் பிர்அவ்னைப் பற்றிய வசனத்தில், “அவன் மூசா நபி (ஸல்) அவர்களைத் துரத்திய சம்பவம் மட்டுமே” பதிவாகி இருப்பதையும், அவன் எப்படி அழிந்தான் என்ற சரித்திரம் அறிவிக்கப் படவில்லை! என்பதையும் அறிந்த, மாரிஸ் புகைல் அவர்கள் தடுமாற்றமும், புதுமாற்றமும் கண்டார். இன்னும் அன்றைய இரவு முழுவதும் பிர்அவ்னின் உடலை உற்றுநோக்கிய படியே மேலும் ஆழமாகச் சிந்திக்கலானார். அவரின் விவேகம் விடைகளைக் கண்டன. கேள்விகளும் விடைகளும் அவரின் தேடல்களுக்கு தோள் கொடுத்தன.
அவர் அவரையே கேட்டார்; “1400 வருடங்களுக்கு முன்னர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் எப்படி அறிந்தார்?” “இந்த விடயம் இப்போதுதானே ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறதே!” அன்று அவரின் தூக்கம் சற்று தூரவே நின்றது. அவரின் ஞானம் ஒரு புதிய கதவு திறந்தது. நோக்கம் அடைவு கண்டது. ஆய்வுகளின் தாக்கம் தேடல் தாகம் தீர்த்தது. அதே வேகத்துடன் தௌறாத் வேதத்திலும் வெளிச்சம் தேடினார், இருளையே சந்தித்தார். இன்றைய இன்ஜீலும், தௌறாத்தும் அவரின் தேடல் பயணத்தில் வழிதெரியாமல் வாபஸ்வாங்கின. குர்ஆன் மட்டுமே, கூடவந்தது. உற்சாகமூட்டி மேலும் கூட்டிச்சென்றது. இன்னும் ‘நல்’ வழி காட்டியது. இதை எண்ணி அதிர்ந்தார்! வியந்தார்!! மெய்சிலிர்த்தார்!!!
ஆய்வுகள் முடிந்ததும் பிரான்ஸ் அரசு, பிர்அவ்னின் உடலை அதிஉயர்தர கண்ணாடிப் பேழையில் வைத்து எகிப்துக்கு அனுப்பி வைத்தது. இந்த காலப்பகுதியில்தான் சவுதி அரேபியாவில் உடற்கூறியல் முஸ்லிம் விஞ்ஞானிகள் குழாமின் மருத்துவ மகாநாடு நடக்கவிருந்தது. உடனே மாரிஸ் புகைல் அவர்கள் தானும் அதில் கலந்து கொள்வதற்காக பயணப் பொதிகளுடன் சவுதி அரபியா பயணமானார்.
அங்கே, அவரின் கண்டுபிடிப்பான “பிர்அவ்ன் மூழ்கியே இறந்தான்” என்பதையும், “அவன் உடல் எந்த மாற்றமுமின்றி அப்படியே இருக்கிறது” என்பதையும் மகாநாட்டில் வெளிப் படுத்தினார். உடனே மாநாட்டுக்கு வந்தவர்களில் ஒருவர் குர்ஆனைத் திறந்து சூராஹ் யூனுஸின் 92வது வசனத்தை ஓதிக்காண்பித்தார்.
“எனினும், உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஒர் அத்தாட்சியாவதற்காக உன்னுடைய உடலை (அது அழியாமல்) நாம் இன்றைய தினம் பாதுகாத்துக் கொள்வோம்" (என்று கூறினோம்.) எனினும், நிச்சயமாக மனிதர்களில் பலர் நம்முடைய (அத்தகைய) அத்தாட்சிகளைப் பற்றியும் பராமுகமாயிருக்கின்றனர். [10:92]”


இந்த குர்ஆன் வசனத்தைக் கேட்ட, மாரிஸ் புகைல் அவர்கள், மெய்ச்லிர்த்தார். கண்கள் பனித்தன. மனவெழுச்சி பெற்றார். எழுந்து நின்று, அம் மகாநாட்டில் பங்கேற்றோர் முன்னிலையில், உரத்து சத்தமிட்டு நான் நேர்வழிக்கு வந்துவிட்டேன் என்றும், இந்த புனித குர்ஆனை முழுமையாகவே நம்புகிறேன் என்றும் சப்தமாகக் கூறினார். இஸ்லாம் அவரை இன்பமாய் அணைத்துக் கொண்டது. மனம் குளிர்ந்தார். மகிழ்வு கண்டார். நெகிழ்வு பெற்று ஆறி அமர்ந்தார். அவரின் ஆத்மா ஆறுதல் கொண்டது. நாடு திரும்ப ஆயத்தமானார்.
புத்தம்புது மனிதனாய், புனிதனான உணர்வுடனும், இலங்கிய இதயத்துடனும், உன்னத உணர்வுடனும், சாந்தி மையங்கொண்ட மனதுடனும், தெளிவடைந்த சிந்தையுடனும், புது உத்வேகத்துடனும், மீண்டும் பிரான்ஸ் சென்ற மாரிஸ் புகைல் அவர்கள், அவரின் ஈமானுக்கு மேலும் உரம் சேர்த்தார்.
அண்மைக் காலங்களில் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் பட்டவைகள்; குர்ஆனோடு ஒருமித்திருப்பதையும்; மேலும் விஞ்ஞான ரீதியாக சரி கண்ட எந்த ஒரு விடயமும் குர்ஆனுக்கு முரணாக இல்லை என்தபதையும் தெரியப்படுத் துவதற்காக; பத்து வருடங்கள் பல ஆய்வுகள் செய்த பின் விஞ்ஞானம்; உண்மை மெஞ்ஞானத்திடம் கற்க இருப்பதையும், குர்ஆன் ஓர் அற்புதம் என்பதையும், இது, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருவசனங்களே ஆகும்! என்பதையும், குர் ஆனில் இருந்தே எடுத்துரைத்தார்.
[“இதற்கு முன்னும் சரி, இதற்குப் பின்னும் சரி உண்மைக்கு மாறான யாதொரு விஷயமும் (திருக்குர்ஆனாகிய) இதனை (அணுகவே) அணுகாது. மிக்க புகழும் ஞானமும் உடையவனால் (இது) இறக்கப்பட்டது. [41:42]”]
இத்திருவசனம் அவரரின் திடமான தீர்மானமானது.
இதன் விளைவு, புனித குர்ஆன் சம்மந்தமாக இந்த பூமியே அதிரும் வகையில் ஒரு புத்தகத்தை எழுதிப் பிரசுரித்தார். அது முழு மேற்கத்தேய நாடுகளையும் ஆட்டங்காண வைத்தது. ஏனைய சமய ஸ்தாபனங்கள் ஸ்தம்பிதம் அடைந்து, ஸ்த்திரம் இழந்தன! கிறிஸ்தவ, யூத, மதத் தலைவர்கள் திக்குமுக்காடினர்.
அந்த அதிரவைத்த நூலின் அருமைத் தலைப்புதான்: “நவீன அறிவின் ஒளியில் பரீட்சிக்கப்பட்ட; பைபிளும், குர்ஆனும், விஞ்ஞானமும், திருமறை நூல்களும்.”. என்பதாகும்.
பல லட்சக்கணக்கான இப்புத்தகங்கள் பிரான்ஸ் மொழியில் இருந்து மாற்று மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. கிழக்கு, மேற்கு அனைத்து நாடுகளின் புத்தகசாலைகளும் போட்டிபோட்டு பிரதிகள் பெற்றன, பெற்ற மாத்திரத்திலேயே எல்லாப் புத்தகங்களும், விற்றும் தீர்ந்தன. மட்டுமன்றி அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு எகிப்தியரின் கையிலும், மொரோக்கரின் கையிலும், வளைகுடா நாட்டுக்காரரின் கையிலும் இப்புத்தகமே இறுக்கமாய் இருந்தது.
மாரிஸ் புகைல் அவர்கள் அவரின் புத்தகத்தின் முகவுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்: “மற்றைய மறை நூல்களில் குறிப்பிடப் படாத, விஞ்ஞான உண்மைகள் குர்ஆனில் நிரூபணமாகி இருப்பதைக் கண்டு நான் ஆரம்பத்திலேயே அதிர்ந்திருக்கிறேன்! மிக அண்மையில் அறியப்பட்ட, பெருவாரியான விஞ்ஞான விளக்கங்கள், இவ்வளவு துல்லியமாக, விஞ்ஞானக் கண்டுபிடிப்பின் கண்ணாடி விம்பங்களைப் போன்று 13 நூற்றாண்டுக்கும் மேலான இப்புத்தகத்தில் பதியப்பட்டு இருக்கிறது. இன்னும் அப்புத்தகம் நிலை பெற்றும் இருக்கின்றது.”
மாரிஸ் புகைல் அவர்களின் புத்தகம் மிகவும் அற்புதமாக எழுதப்பட்டதாலும், குறுகிய காலத்தினுள் அது உலகப் புகழ் பெற்றதாலும், பிரான்ஸ் அகடமியினால் “வரலாறு” க்கான விருது அவருக்கு வழங்கப் பட்டது. இந்த அற்புத புத்தகப் பிரசுரத் திற்குப் பின், இன்னும் பல அருமையான இஸ்லாத்திற்கு வழிகாட்டும் புத்தகங்களையும் எழுதினார். அறிஞர்கள் பலரின் சிந்தனைகளைத் தூண்டினார்!
இப்படி தன் முழு வாழ்வையும், இஸ்லாத்திற் க்காக அர்ப்பணித்த இம்மாமேதை, 1998ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி, இறையடி சேர்ந்தார். இன்னா’லில்லாஹி வொ’இன்னா இலைஹி ராஜிஊன்!

Related Posts: