செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

வியட்நாமில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

1985 ம் ஆண்டு, அது 50 அல்லது 60 சதவீதமாக இருந்தது. தற்போது பத்து சதவீதமாக குறைந்து விட்டது. அது இன்னும் குறைந்து கொண்டே செல்கின்றது.
சராசரி தனி நபர் வருமானமும் $100 USD இலிருந்து $2,000 USD ஆக அதிகரித்துள்ளது. அதனால் சர்வதேச மட்டத்தில், வியட்நாம் மிகவும் வறுமையான நாடு என்ற நிலையில் இருந்து விடுபட்டு, கீழ் மத்திய வருமானம் கொண்ட நாடு என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. இதனை உலக வங்கியும் உறுதிப் படுத்தி உள்ளது.
நீண்ட காலம் இழுபட்ட, பேரழிவுகளை ஏற்படுத்திய போர் முடிந்த பின்னர் உயிர்த்தெழுந்த வியட்நாம், உலகிலேயே மிகவும் வறுமையான நாடுகளில் ஒன்றாக இருந்தது. ஆரம்பத்தில் சோவியத் சார்பு சோஷலிசப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்பியது. சோவியத் யூனியனின் மறைவுக்குப் பின்னர், கலப்புப் பொருளாதாரத்தை பின்பற்றி வந்தது.
Doi Moi என்ற பெயரில் அமுல் படுத்தப் பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் சந்தைப் பொருளாதாரம் இயங்க அனுமதித்தது. அரசு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய கலப்புப் பொருளாதாரம் அது.
தனியார் நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப் பட்டாலும், பிரதானமான பொருளாதாரக் கட்டமைப்புகளை அரசு தான் மேற்கொள்கின்றது. மிகப் பெரிய முதலீடுகள் யாவும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும். ஒன்றில் நேரடியான அரசு முதலீடு, அல்லது Joint Venture எனப் படும் சம பங்குகளை உள்ளடக்கி இருக்கும். மேலும் பொருளாதாரத்தை மேலிருந்து கண்காணித்து கட்டுப்படுத்தும் பொறுப்பையும் அரசு எடுத்துள்ளது.