உலகம் முழுதும் பல நாடுகளில் பல்லாயிரம் பேரைக் காவுவாங்கிவிட்டு, இப்போதுதான் ஓய்ந்திருக்கிறது எபோலா. இதோ, தற்போது ஜிகா வைரஸ் தனது மரண தாண்டவத்தைத் துவங்கி இருக்கிறது.
உலக சுகாதார நிறுவனம் கூட எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஜிகா வைரஸ் அமெரிக்கா முதல் பல நாடுகளிலும் வேகமாகப் பரவிவருவதால், தற்போது உலகமே எதிர்நோக்கும் கேள்வி, இதை எப்படித் தடுப்பது என்பதுதான். ஜிகா வைரஸ்க்கு நேரடி மருந்து, மாத்திரைகள் சிகிச்சைகள் இல்லை என்பதுதான் சிக்கலே. இந்தியாவில் இன்னும் ஜிகா வைரஸ் பரவவில்லை என்பது ஆறுதல் என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது அவசியம்.
ஜிகா வைரஸ் எப்படிப் பரவுகிறது ?
1947-ம் ஆண்டு உகாண்டா நாட்டில்தான் முதன் முதலில் இந்த வைரஸ் பரவியது. ஆப்பிரிக்க நாடுகளில டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுவுக்குப் பெயர் ‘ஏடிஸ் எஜிப்டி.’ இந்த கொசு மூலமாகத்தான் ஜிகா வைரஸும் பரவிவருகிறது. இந்தியாவில் ‘ஏடிஸ் எஜிப்டி’ கொசு அதிகம் காணப்படுகிறது என்பதால், ஜிகா வைரஸ் எளிதில் வேகமாகப் பரவ வாய்ப்பு உள்ளது என்பது மிரட்டும் எதார்த்தம். ஜிகா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆரம்ப நாட்களில் காய்ச்சல் குறைவாகத்தான் இருக்கும். தோல் கடுமையாகப் பாதிக்கப்படும். இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை இந்தக் காய்ச்சல் இருக்கும். இந்த வைரஸைத் தடுப்பதற்கு தடுப்பூசி இல்லை.
ஜிகா வைரஸ் ஒருவருக்குப் பரவினால் காய்ச்சல் மட்டும் இன்றி மூட்டு இணைப்புகளில் வலி ஏற்படும். மேலும், கடுமையான தலைவலி வருவதற்கும் வாய்ப்பு உண்டு என்கிறது ‘உலக சுகாதார நிறுவனம்.’
தடுக்கும் வழிகள்:
பிளேவி வைரஸ் என்ற வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது ஜிகா வைரஸ். ‘ஏடிஸ் எஜிப்டி’ கொசு, காலை மற்றும் மாலை வேளைகளில்தான் அதிகம் வெளியேவரும். எனவே, காலை ஒன்பது மணி வரையும், மதியம் மூன்று மணிக்குப் பிறகும் ஜன்னல்களைச் சாத்திவிடுவது நல்லது.
வீட்டைச் சுற்றி நீர்த் தேங்காமல், கொசு அண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் ஓடுகள். டயர்கள், பிளாஸ்டிக் கவர்களில் வைக்கப்பட்டுள்ள செடித்தொட்டிகள் என எந்த இடத்திலும் கொசுக்களை அண்டவிடக் கூடாது.
இரவு தூங்கும்போது கை, கால்கள் போன்றவற்றை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளை அணியுங்கள். குழந்தைகளை, முதியவர்களை இந்த வைரஸ் எளிதில் தாக்கும் என்பதால், அவர்களுக்கு பிரத்யேகக் கவனம் கொடுப்பது நல்லது. கொசுவலை போட்டுக்கொண்டு படுப்பது நல்லது.
ஏற்கெனவே, சமீபத்தில் மழைக்காலத்தில் காய்ச்சல் வந்து மீண்டவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.மூன்று நாட்களுக்கும் மேல் காய்ச்சல் நீடித்தால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாகச் செல்வது நல்லது.
நிலவேம்பு கஷாயம்
டெங்கு காய்ச்சலுக்குச் சாப்பிடும் நிலவேம்புக் கஷாயம், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்பதால், அவ்வப்போது அனைவருமே நில வேம்புக் கஷாயம் குடிப்பது நல்லது.
காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை நன்றாகச் சுத்தம்செய்து சாப்பிட்டுவந்தால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வெளி இடங்களில் தண்ணீர் அருந்தாமல், பாதுகாப்பான முறையில் வீட்டில் கொதிக்கவைத்து, ஆறவைத்த நீரையே அருந்துங்கள்.சமையல் அறையில் கொசுக்கள் வசிப்பதை அனுமதிக்காதீர்கள். தினமும் சமையலறையை நன்றாகச் சுத்தம்செய்யுங்கள்.
டீ, காபிக்குப் பதிலாக, பழச்சாறு அருந்துங்கள். ஜிகா வைரஸ் மட்டும் அல்ல வேறு எந்தக் காய்ச்சலும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், சாதாரண காய்ச்சல் வந்தாலும் நோய் எதிர்ப்புச் சக்தி இயல்பாகவே குறையும். அந்த சமயங்கள் ஜிகா வைரஸ் எளிதில் பரவும் வாய்ப்பு இருப்பதை மறந்துவிடாதீர்கள்.
இந்தியாவில் விரைவில் வெயில் காலம் துவங்கவிருப்பதால், ஜிகா வைரஸ் வீரியமாக பரவும் வாய்ப்புகள் குறைவுதான். ஆனால், வந்த பின்னர் அவதிப்படுவதைவிட வரும் முன் காக்கும் எளிய வழிகளைப் பின்பற்றுவோம். ஜிகா வைரஸை வெல்வோம்!