வியாழன், 4 பிப்ரவரி, 2016

கருணைக் கொலை சட்டம் இயற்ற தயார்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.


கருணைக் கொலை சட்டம் இயற்ற தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
கடந்த 14 ஆண்டுகளாக கருணைக் கொலை தொடர்பாக பல்வேறு விவாதங்கள், பல்வேறு வரைவு மசோதாக்களை நாடு சந்தித்துவிட்ட நிலையில் முதன்முறையாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இத்தகைய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
அரசின் சார்பில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தாக்கல் கடந்த 28-ம் தேதி (ஜனவரி 28) இந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
மத்திய அரசின் அந்த பிரமாண பத்திரத்தில், "கருணைக் கொலை தொடர்பாக இந்த அரசு சட்டம் இயற்ற தயாராக இருக்கிறது. (அதாவது இனிமேல் குணமாக முடியாத என்ற நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சையை நிறுத்தி அவர் உயிரிழக்கச் செய்வது) ஆனால் உச்ச நீதிமன்றத்தில் கருணைக் கொலை தொடர்பான வழக்கு அரசியல் சாசன அமர்வு முன் நிலுவையில் இருப்பதால் அரசின் கைகள் கட்டப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளது.
தனது முடிவு தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள விளக்கத்தில், "மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு ஜூலை 2014 முதல் ஜூன் 2015 இடையேயான காலகட்டத்தில் கருணைக் கொலை தொடர்பாக பல்வேறு விவாதங்களை மேற்கொண்டுள்ளது.
அந்த விவாதங்கள் அடிப்படையில் நிபுணர் குழுவானது கருணைக் கொலை சட்டம் இயற்றுவது தொடர்பாக சில பரிந்துரைகளை வழங்கியது.
மேலும், சட்ட அமைச்சகத்துடனும் கருணைக் கொலை சட்டம் இயற்றுவது குறித்து தகுந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இவற்றின் அடிப்படையிலேயே கருணைக் கொலை சட்டம் இயற்ற அரசு தற்போது தயாராக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் கருணைக் கொலை மனிதவதையாக கருதப்படுகிறதா அல்லது கருணை செயலாக கருதப்படுகிறதா என்ற அரசின் நிலைப்பாடு முதன்முறையாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மாற்றத்தை ஏற்படுத்திய உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்
கருணைக் கொலை மீதான பார்வையில் மாற்றம் ஏற்பட கடந்த 2011-ல் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட பரிந்துரைகளும் காரணம் என அரசு தனது பிரமாணப் பத்திரத்திரத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
மும்பை கெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நர்ஸ் அருணா ஷான்பாக்கை கருணைக் கொலை செய்வது தொடர்பாக 2011-ல் உச்ச நீதிமன்றம் முன்வைத்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் அடிப்படையிலேயே அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
T S Arunkumar