வியாழன், 4 பிப்ரவரி, 2016

சினிமா தியேட்டர்கள், ஹோட்டல்கள், வங்கிகள் 24 மணி நேரமும் இயங்க புதிய சட்டம்: மத்திய அரசு திட்டம்.


சினிமா தியேட்டர்கள், ஹோட்டல் கள், வங்கிகள் மற்றும் அலுவலகங் கள் ஆகியவை 24 மணி நேரம் (24/7) திறந்திருப்பதற்கும் இயங்கு வதற்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டு உள்ளது. மேலும் இந்த சட்டத்தில், பெண்கள் இரவு நேரங்களில் வேலை செய்வதற்குரிய வசதிகளையும் இரவு நேரங்களில் பணிபுரியும் பெண்களுக்கு நிறுவனங்கள் வாகன வசதி ஏற்பாடு செய்து தருவதை கட்டாயமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பல்வேறு அமைச்சகம் மற்றும் மத்திய அரசு துறைகளின் கருத்துகளை கேட்பதற்காக கடைகள் மற்றும் நிறுவனங்கள் (வேலைவாய்ப்பு மற்றும் சேவை நிபந்தனைகள் கட்டுப்பாடு) சட்டத்திற்கான (2015) வரைவை அரசாங்கம் அனுப்பியுள்ளது. மேலும் இந்த மாதிரி சட்ட வரைவை மாநிலங்கள் தங்களுக்கு ஏற்ப மாற்றிகொள்ள முடியும்.
“அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் வராது. மால்கள், சினிமா தியேட்டர்கள், ஐ.டி நிறுவனங்கள் 24 மணி நேரமும், வருடத்தின் 365 நாட்களும் வேலை செய்ய அனுமதிக்கப்படும். நாங்கள் மாநிலங்களுக்கு ஆலோசனை களை வழங்க இருக்கிறோம். இதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை. இதை மாநிலங்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளலாம் இல்லையென்றால் மாற்றங்கள் கொண்டு வரலாம்” என்று மத்திய தொழிலாளர் துறை செயலாளர் சங்கர் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும், “கடைகள் மற்றும் நிறுவனங்கள் இது தொடர்பான மற்ற சட்டங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். சேவைத் துறையின் வருமானம் உயர இந்த மாற்றம் உதவும்” என்று தெரிவித்தார்.
தற்போது தொழிற்சாலைகள் சட்டம் 1948-ன் கீழ் வராத நிறுவனங்கள், அச்சு இயந்திர கடைகள், வங்கிகள், சினிமா அரங்குகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் உள்ளடக்கிய அனைத்திற்கும் அனுமதி வழங்க இந்த வரைவு சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த சட்டம் அரசு அலுவலகங்கள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகிய இரண்டிற்கும் பொருந்தாது.
“தொழில் புரிவதற்கான சூழலை எளிதாக்குவதை இந்த சட்டம் ஊக்கப்படுத்தும். மேலும் தொழிலாளர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவேண்டும். தற்போதைய சூழ்நிலையில் அதிக நிறுவனங்கள் குறிப்பாக இ-காமர்ஸ் துறை 365 நாட்கள் மற்றும் நாள் முழுவதும் இயங்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தற்போது அனுமதி வாங்குவது என்பது மிக கடினமான விஷயம். ஆனால் தொழில்துறைக்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கும்” என்று இந்திய பணியாளர் கூட்டமைப்பின் தலைவர் ரிதுபர்னா சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
T S Arunkumar