வெள்ளி, 17 ஜூன், 2016

‪#‎எஸ்_பி_பட்டிணம்_காவல்நிலைய_படுகொலைக்கு‬


காரணமான எஸ்.ஐ. காளிதாசுக்கு மீண்டும் பணி- மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!
+++++++++++++++++
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
++++++++++++++++++++++
கடந்த 14-10-2014 அன்று இராமநாதபுரம் எஸ்.பி.பட்டிணத்தைச் சேர்ந்த செய்யது முஹம்மது என்ற இளைஞர் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு துணை ஆய்வாளர் காளிதாஸால் தாக்கப்பட்டு பிறகு துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, "இது ஒரு அப்பட்டமான படுகொலை; இதுதொடர்பாக காளிதாஸ் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்தது. இதையடுத்து தமிழக அரசு, துணை ஆய்வாளர் காளிதாஸை உடனடி பணி இடைநீக்கம் செய்தது மட்டுமல்லாமல் இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கும் உத்திரவிட்டு ஆணையிட்டது. அதேபோல் உச்சநீதிமன்ற மோதல் சாவுகள்(என்கவுன்டர்) குறித்து அளித்த ஒரு தீர்ப்பின் அடிப்படையில் குற்றவியல் நடுவர் விசாரணைக்கும் உத்திரவிடப்பட்டது. இரண்டு விசாரணைகளும் முடிந்த நிலையில் இராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி தாக்கல் செய்துள்ள அறிக்கையில், காளிதாஸ் மீது இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 302ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கடந்த 19.06.2015 அன்று கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் காளிதாஸ் தாக்கல் செய்த மனுவில் தனக்கு வழங்கப்பட்ட பணி இடைநீக்கத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வலுவான ஆதாரங்களுடன் வலுவாக எதிர்ப்பு தெரிவிக்காத்தால் மெஉயர்நீதிமன்றம் பணியிடை நீக்கத்திற்கு இடைக்கால தடை விதித்து அவருக்கு மீண்டும் பணி வழங்குமாறு உத்திரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் காளிதாஸ் மீண்டும் பணியில் சேர்ந்தால் அது தவறான முன்னுதாரணமாக ஆகி விடும். சட்டத்தை தமது கையில் எடுத்து அத்து மீறி நடக்கும் காவல் அலுவலர்களுக்கு ஊக்கம் அளித்து விடும்.
எனவே, தமிழக அரசு மீண்டும் காளிதாசுக்கு பணி அளிக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பிற்கு எதிராக உடனே மேல்முறையீடு செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
(ஒப்பம்) எம். எச். ஜவாஹிருல்லா