வியாழன், 9 ஜூன், 2016

எஞ்சினியரிங் கவுன்சிலிங் A to Z


எஞ்சினியரிங் படிப்பதற்கான விண்ணப்ப நடைமுறைகள் முடிந்துவிட்டன. சுமார் 1 லட்சத்து 85 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். அடுத்து, கவுன்சிலிங்... பிடித்த கல்லூரியில் பிடித்த படிப்பைத் தேர்வு செய்வதற்கான களம் என்பதால் கவுன்சிலிங் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கவுன்சிலிங்கை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி? என்னென்ன நடைமுறைகள்..? விரிவாகப் பார்க்கலாம்.
* தமிழகத்தில் சுமார் 570 பொறியியல் கல்லூரிகளில் சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ளன. இவை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சிலிங் (ஒற்றைச்சாளரக் கலந்தாய்வு) மூலம் நிரப்பப்படும். சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஜூன் மூன்றாவது வாரத்தில்இந்த கவுன்சிலிங் நடைபெற உள்ளது. கவுன்சிலிங் குறித்து எவ்விதப் பதற்றமும் அடையத் தேவையில்லை.
* கவுன்சிலிங் குறித்த தகவல்கள் இ-மெயில் மூலமாகத தெரிவிக்கப்படும். எந்த மெயில் ஐ.டி. மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தீர்களோ, அந்த ஐ.டிக்குத்தான் கடிதம் வரும். பாஸ்வேர்டை மறந்துவிடாமல் அடிக்கடி திறந்து பாருங்கள். கவுன்சிலிங்குக்குப் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவருடன் மாணவர்கள் பங்கேற்கலாம். கவுன்சிலிங் கடிதத்தைக் காட்டினால் இருவருக்கும் அரசுப் பேருந்துகளில் பாதிக் கட்டணச் சலுகை வழங்கப்படும்.
* கவுன்சிலிங்குக்குக் கிளம்பும் முன்பே, படிப்பையும், கல்லூரியையும் முடிவுசெய்துவிடுங்கள். 5 கல்லூரிகள், 5 படிப்புகளை வரிசைப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. கவுன்சிலிங்கில் நீங்கள் படிப்பு/கல்லூரியைத் தேர்வு செய்ய மிகச்க்சில நிமிடங்களே கிடைக்கும். அதனால், ஒரு கல்லூரி கிடைக்காத பட்சத்தில் இன்னொரு கல்லூரியை உடனடியாகத் தேர்வு செய்ய வசதியாக இருக்கும். ஒரே பெயரில் பல கல்லூரிகள் இருப்பதால் குழப்பம் நேரலாம். அதனால் கல்லூரிகளின் குறியீட்டு எண்ணை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
* சென்னை பெருங்களத்தூர், தாம்பரம் பேருந்து நிலையம், கிண்டி கத்திப்பாரா, கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் உங்களை அணுகுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். “காலேஜை நேரா வந்து பாருங்க... கார்லயே கூட்டிட்டுப் போறோம். அங்கேயே குளிச்சுட்டு டிபன் சாப்பிட்டு கவுன்சிலிங் போகலாம்” என்று சிலர் வலை விரிப்பார்கள். அவர்களிடம் சிக்கினால் அவர்கள் சொல்லும் கல்லூரியைத் தான் தேர்வு செய்தாக வேண்டும். உங்கள் திட்டத்தைக் குலைத்துவிடுவார்கள். நீங்கள் முடிவு செய்தபிறகு, மற்றவர்களின் ஆலோசனையையோ, வழிகாட்டுதலையோ கேட்காதீர்கள். அடுத்தவர்கள் என்ன படிப்பைத் தேர்வு செய்கிறார்கள் என்று பார்த்து முடிவை மாற்றிக்கொள்ளாதீர்கள்.
* கவுன்சிலிங் நாளன்று, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு 2 மணி நேரம் முன்பாகவே அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சென்று விடுங்கள். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படும் பிரத்யேக அரங்கில் பெரிய திரைகளில் காலி நிலவரங்கள் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும். அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை காலியிட நிலவரம் பதிவிடப்படும். இவற்றைத் தொடர்ந்து கவனிப்பது நல்லது.
* கவுன்சிலிங் நடக்கும் இடத்தில் வங்கி கவுண்டர்கள் செயல்படும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் ரூ.1000, பிற மாணவர்கள் ரூ.5000 வங்கி கவுண்டரில் கட்டி கவுன்சிலிங் படிவத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்தப் படிவத்தின் அடிப்படையில்ப் தான் கவுன்சிலிங் நடக்கும், இந்தப் பணத்தை டி.டியாகவும் எடுத்துக் கொண்டு வரலாம். இப்பணம், உங்கள் கல்விக்கட்டணத்தில் கழித்துக்கொள்ளப்படும்.
* ஒதுக்கப்பட்ட நேரத்திற்குச் சற்று முன்னதாகவே மாணவர்கள் ஒலிபெருக்கி மூலம் அழைக்கப்படுவார்கள். மாணவருடன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவர் மட்டும் கவுன்சிலிங் ஹாலுக்குள் அனுமதிக்கப்படுவார். முதலில் கவுன்சிலிங் விளக்க அறைக்குச் செல்ல வேண்டும். அங்கு இரு பெரிய திரைகளில் கவுன்சிலிங் நடைமுறைகள் விளக்கப்படும். சான்றிதழ்களை எந்த அடிப்படையில் அடுக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் விளக்குவார்கள்.
* அடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு அறைக்குச் செல்ல வேண்டும். மாணவர்களின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை நவீன கருவிகளின் உதவியோடு சரி பார்க்கப்படும். 10ம் வகுப்பு, +2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், +2 ஹால்டிக்கெட், வசிப்பிடச் சான்று, முதல் தலைமுறை எனில் அதற்கான சான்று, விளையாட்டுத் துறையில் இருந்தால் அதற்கான சான்று, மாணவரின் பெற்றோர் முன்னாள் ராணுவவீரர் எனில் அதற்கான சான்று, மாற்றுத்திறனாளி எனில் அதற்கான சான்று ஆகியவற்றின் ஒரிஜினலை கொண்டு செல்ல வேண்டும்.
* சான்றிதழ் சரிபார்க்கப்பட்டபின், நான்கைந்து பேராக கவுன்சிலிங் அறைக்குள் அனுப்புவார்கள். அங்கு 40க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் இருக்கும், வரிசை அடிப்படையில் மாணவரும், பெற்றோரும் கம்ப்யூட்டர் முன் அமர வைக்கப்படுவார்கள். ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கு அருகிலும் ஒரு உதவியாளர் இருப்பார். படிப்பையும், கல்லூரியையும் தேர்வு செய்ய அவர் உதவுவார்.
* கல்லூரியையும், படிப்பையும் தேர்வு செய்தபிறகு, மாணவர் மட்டும் அதே கட்டடத்தின் மேல்தளத்தில் உள்ள அறைக்குச் சென்று ஒதுக்கீட்டு கடிதத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அந்தக் கடிதத்தில், நீங்கள் தேர்வு செய்த கல்லூரி, படிப்பு சரியாக இருக்கிறதா என்பதைப் பார்க்கவேண்டும். ஒருமுறை கல்லூரி, படிப்பைத் தேர்வுசெய்து கடிதம் பெற்றபிறகு எதையும் மாற்ற முடியாது.
* எதிர்பாராத காரணங்களால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாத மாணவர்கள் பின்னர் பங்கேற்கலாம். ஆனால், பழைய ரேங்க்படி கல்லூரி/ படிப்பைத் தேர்வு செய்யமுடியாது. அந்தத் தருணத்தில் எது இருக்கிறதோ அதில் இருந்து தான் தேர்வு செய்ய வேண்டும்.
* ஒதுக்கீட்டுக் கடிதம் பெற்றபின், அருகில் உள்ள மருத்துவமனையில் உடல்தகுதி சோதனை செய்துகொள்ள வேண்டும். அதற்குரிய விண்ணப்பம் கவுன்சிலிங் அறைக்கு முன்னால் தரப்படும். இதோடு கவுன்சிலிங் நடைமுறை நிறைவுபெற்றது.