செவ்வாய், 2 மே, 2017

தமிழக அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் May 02, 2017

தமிழக அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்


தனியார் மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவ மேற்படிப்புக்கான 50 சதவீத இடங்களை, முறையாக பெற தவறிய வழக்கில், தமிழக அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் திவ்யா ஷரோன், நாமக்கலை சேர்ந்த மருத்துவர் காமராஜ் உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ பட்டமேற்படிப்புக்கான இடங்களில், 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும் எனவும், ஆனால் பெரும்பாலான கல்லூரிகள் அவ்வாறு ஒதுக்குவதில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அரசு ஒதுக்கீட்டு இடங்களை முறையாக ஒதுக்காத, தனியார் கல்லூரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு மற்றும் மருத்துவ கவுன்சிலுக்கு கேள்வி எழுப்பினார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கிருபாகரன், தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மருத்துவக்கல்லூரிகளை தவிர்த்து, தனியார், நிகர்நிலை என அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும், மருத்துவ மேற்படிப்புக்கு 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும். அரசு ஒதுக்கீட்டு இடங்களை முறையாக பெற நடவடிக்கை எடுக்காத தமிழக அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்தார். 

இதற்கிடையே, தமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாயை கீழடி அகழ்வாராய்ச்சிக்கு வழங்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதேபோல், மருத்துவக்கவுன்சிலுக்கு விதிக்கப்பட்ட ஒருகோடி ரூபாய் அபராத தொகையை மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை ஜூன் 12ம் தேதிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் ஒத்திவைத்தார்