செவ்வாய், 2 மே, 2017

மலைக்க வைக்கும் ஜப்பான் சொகுசு ரயில் பயண கட்டணம் May 02, 2017


மலைக்க வைக்கும் ஜப்பான் சொகுசு ரயில் பயண கட்டணம்


6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பயண கட்டணம் கொண்ட சொகுசு ரயிலை ஜப்பான் அறிமுகப்படுத்தியுள்ளது. 

கிழக்கு ஜப்பான் ரயில்வே நிறுவனம் இந்த ஆடம்பர சொகுசு ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. சொகுசு இருக்கைகள், வானத்தை பார்த்தவாறு பயணிப்பதற்கு ஏற்ற வடிவமைப்பு, இருவர் மட்டும் தனியாக தங்குவதற்கான அறை, கட்டில்கள், சமயலறை, குளியலறை, பியானோ வாசிப்பதற்கான அறை என ஒவ்வொன்றும் பிரம்மாண்டமான முறையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 



ஷிகி-ஷிமா என பெயரிடப்பட்டுள்ள இந்த சொகுசு ரயில், டோக்கியோ - ஹோக்கிடோ இடையே இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் உயர் வகுப்பில் 4 நாட்கள் பயணிப்பதற்கு 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணிப்பதற்கு மிகக் குறைந்த கட்டணமாக ஒரு லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 



இந்த கட்டணத்தில், சாதாரண வகுப்பில் 2 நாட்களுக்குப் பயணிக்க முடியும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிக கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் நிர்ணயித்துள்ள போதிலும், இதில் பயணிப்பதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த ரயிலில் பயணிப்பதற்கான இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 



இந்த ரயிலில் பயணிக்கும் முதல் 33 பயணிகளுக்கு சலுகைகளை அறிவித்துள்ள ரயில்வே நிர்வாகம், இவர்களுக்கு மட்டும், ரயில் பாதையின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ரயில் நின்று செல்லும் என்று அறிவித்துள்ளது.