வெள்ளி, 5 மே, 2017

விமானத்தில் தகராறில் ஈடுபடுபட்டால் பயணம் செய்ய தடை! May 05, 2017

விமானத்தில் தகராறில் ஈடுபடுபட்டால் பயணம் செய்ய தடை!


விமானத்திலோ, விமான நிலையத்திலோ தகராறில் ஈடுபடுபவர்களுக்கு விமானத்தில் செல்லத் தடை விதிப்பதற்கான புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர கெயிக்வாட் ஏர் இந்தியா மேலாளரைக் காலணியால் தாக்கியதை அடுத்து அவர் முன்பதிவு செய்திருந்த பயணச்சீட்டுக்களை ஏர் இந்தியா நிர்வாகம் ரத்து செய்தது. இதுபோல் விமானத்தில் செல்லும்போதோ, விமான நிலைய வளாகத்திலோ ஊழியர்களிடமும் மற்ற பயணிகளிடமும் தகராறு செய்பவர்கள் விமானத்தில் செல்வதற்குத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் அவர்களைத் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் சேர்க்க விமானப் போக்குவரத்து இயக்ககத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். தகராறு செய்வோரின் அடையாளங்களைக் கண்டறிந்து அவர்கள் விமானத்தில் செல்வதைத் தடுப்பதற்காகப் பயணச் சீட்டில் ஆதார் எண்ணைப் பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்ய ஒருவருக்கு எந்தச் சூழ்நிலையில் எவ்வளவு காலத்துக்குத் தடை விதிக்கலாம் என்பதற்கான புதிய விதிமுறைகளை விமானப் போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ வெளியிட்டார். அதன்படி தகராறில் ஈடுபட்டால் 3 மாதம் தடை விதிக்கப்படும். 

பாலியல் தொல்லை, அடிதடி ஆகியவற்றில் ஈடுபட்டால் 6 மாதம் தடை விதிக்கப்படும். கொலைமிரட்டல் விடுத்தால் 2 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்படும். உள்நாட்டுப் பயணத்துக்கே இந்தத் தடை பொருந்தும் என்றும், வெளிநாட்டு விமானப் பயணத்துக்கும் தேவைப்பட்டால் இந்தத் தடையை விதிக்கலாம் என்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தெரிவித்தார்

Related Posts: