“உங்கள் கைகளில் ஆயுதங்கள் இல்லை... கற்களும் கூட இல்லை... ஆப்பிள் மற்றும் பூ கூடைதான் இருக்கிறது. இதை விற்று, அந்த நாளுக்கான வாழ்வாதாரத்தை எப்படியாவது ஈட்டிவிட வேண்டும் என்று சாலையில் சென்று கொண்டிருக்கிறீர்கள். உங்களைக் காவல்துறை வழிமறிக்கிறது. எந்தக் காரணமும் இல்லாமல், கைது செய்கிறது. 2 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கிறது. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்... இப்படியான சூழலில், உங்களால் வாழ முடியுமா...? ஆனால், நாங்கள்... லட்சக்கணக்கான காஷ்மீரிகள் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் கைது செய்யப்படுகிறோம்... ஏன் கைது செய்யப்பட்டோம் என்று தெரியாமல், இளைஞர்கள் சிறையில் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதை கேள்வி கேட்டால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், எங்களை தீவிரவாதிகள் என்கிறார்கள். ஹூம்...‘எந்த ஒருவருக்கும் வாழ்க்கைக்கும், சுதந்திரத்துக்கும், பாதுகாப்புக்குமான உரிமை இருக்கிறது. சட்ட விதிகளின்படி இல்லாமல், மனம் போன போக்கில், எந்த ஒருவரையும் கைது செய்யவோ, தடுப்புக் காவலில் வைக்கவோ அல்லது நாடு கடத்தவோ கூடாது' என்கிறது மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்.
இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு அல்லவா...? அதனால் என்ன செய்யலாம் என யோசித்தது...? சட்டத்தை மீறித்தானே கைது செய்யக் கூடாது? சரி... இதற்காக ஒரு சட்டத்தை இயற்றலாம் என்று ஒரு சட்டத்தை இயற்றி மனம் போன போக்கில் கைது செய்து கொண்டிருக்கிறது” என ஆங்கிலத்தின் எளிமையான சொற்களை கோத்து அமைதியாக அதே சமயம் அழுத்தமான மொழியில் பேசுகிறார் காஷ்மீரின் மனித உரிமை செயற்பாட்டாளர் குர்ரம் பர்வேஷ். சென்னையில் இளந்தமிழகம் ஒருங்கிணைத்திருந்த 'காஷ்மீரில் நடப்பது என்ன' கூட்டங்களில் கலந்துகொள்ள வந்திருந்தவரை சந்தித்து உரையாடினோம்...
அந்த உரையாடலின் எழுத்து வடிவம்,
அந்த உரையாடலின் எழுத்து வடிவம்,
''நாங்கள் காரணமா...? காஷ்மீரிகள் காரணமா...? இந்தியாதானே ஐ.நா-வில் பொது வாக்கெடுப்புக்கு ஒப்புக்கொண்டது. அது ஒப்புக் கொண்ட சுயநிர்ணய உரிமையைத்தானே கேட்கிறோம். அதைக்கேட்டால், அந்த நீதியை கோரினால், கொடுத்த வாக்கின்படி நடந்துகொள்ளுங்கள் என்றால் எங்களை பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் என்கிறீர்கள்''.
“ஏற்கெனவே வாக்கு கொடுத்திருக்கலாம்தான். ஆனால், இப்போதுள்ள நிதர்சனத்தைப் பேசுங்கள். உலகப் பொருளாதாரச் சூழல் மாறிவிட்டது. இப்படியான சூழலில், இந்தியாவின் தயவில்லாமல் உங்களால், காஷ்மீரிகளால் வாழ்ந்து விட முடியுமா...?முன்னேற்றத்தைக் கண்டுவிட முடியுமா...?”
''ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்... இத்தனை நாட்களாக நாங்கள் இந்தியாவின் தயவில்லாமல்தான் வாழ்ந்திருக்கிறோம்; முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறோம். இந்தியாவின் பிற பகுதிகளில், எத்தனை பட்டினிச் சாவுகள் நடந்து இருக்கின்றன? ஆனால், இத்தனை ஆண்டுகளில், ஒரு பட்டினிச் சாவுகூட காஷ்மீரில் இல்லை. நாங்கள் உழைப்பாளிகள். நாங்கள் அன்பானவர்கள். எங்களில் யாரையும் நாங்கள் கைவிடுவதில்லை. இந்தியா அடக்குமுறையை கைவிட்டாலே, வெளி தயவுகள் எதுவும் இல்லாமல் முன்னேறி விடுவோம். அதுமட்டுமல்ல, இந்தியாவின் சீழ்படிந்த அரசியல், சாதியக் கட்டமைப்பு என எதுவும் எங்களை இந்தியாவை நோக்கி ஈர்க்கவில்லை... இந்தியாவிடமிருந்து கற்க எதுவும் இல்லை''
''ஸ்திரமற்ற சூழ்நிலையிலும் பொருளாதார ரீதியாகப் பிரச்னை இல்லை, பட்டினிச் சாவு இல்லை என்கிறீர்கள்... அப்படியானால், உங்களுக்கு பாகிஸ்தானிலிருந்து பணம் வருகிறது தானே...? உங்களுடையப் போராட்டம் பாகிஸ்தான் ஆதரவளிக்கும் போராட்டம்தானே...?''
“உங்களுக்கு எப்படி புரியவைப்பது... உங்களுடைய கேள்வி மட்டுமல்ல, இதுதானே எல்லோருடைய கேள்வியுமாக இருக்கிறது...? மக்களின் பொதுப் புத்தியில் இப்படியொரு எண்ணத்தைத்தானே இந்தியா விதைத்திருக்கிறது? எங்கள் போராட்டம் ஆக்கிரமிப்புக்கு எதிரானப் போராட்டம்... பாகிஸ்தான் ஆக்கிரமிப்பையும், சீனாவின் ஆக்கிரமிப்பையும் எதிர்க்கிறோம். நாங்கள் எப்படி பொருளாதார ரீதியில், வலுவாக இருக்கிறோம் என்றுதானே கேட்கிறீர்கள்... அதுதானே உங்கள் சந்தேகம்...? நாங்கள் ஒரு கூட்டுச் சமூகமாக வாழ்கிறோம். எங்களுக்குள் உதவிக் கொள்கிறோம்... அவை எல்லாவற்றையும்விட கடுமையாக உழைக்கிறோம்''.
“நீங்கள் சுயநிர்ணய உரிமைப் பற்றி பேசுகிறீர்கள். ஆனால், யூ.பி.எஸ்.இ தேர்வில் காஷ்மீரிலிருந்துதானே அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வாகி இருக்கிறார்கள். அதுவும் அதிக மதிப்பெண்களில்... அப்படியானால், காஷ்மீரிகள் இந்தியாவின் கட்டமைப்புக்குள் வர விரும்புகிறார்கள் என்றுதானே அர்த்தம்...?”
''பிரிட்டிஷ் ஆட்சியின்போதுகூடத்தான் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் பிரிட்டிஷ் நிர்வாகத்திலும், ராணுவத்திலும் பங்காற்றினார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்...? அதுமட்டுமல்ல, காஷ்மீரிகள் நன்கு படிக்கக் கூடியவர்களும் கூட...!''
“ஓ... நன்கு படிக்கக் கூடியவர்கள் என்பதால்தான் கைகளில் கற்களுடன் மாணவர்களும், மாணவிகளும் வீதிகளில் நிற்கிறார்களா...?”
''நீங்கள் இதைக் கிண்டலாக, வன்ம வார்த்தைகளில் கேட்கிறீர்கள். ஆனால், இதுதான் உண்மை... எங்கள் மாணவர்கள் நன்கு படிக்கக் கூடியவர்கள்... அவர்கள் எங்களின் தனித்துவமான வரலாறுகளைப் படிக்கிறார்கள். அரசியல் படிக்கிறார்கள். அதனால், இந்தியாவின் வன்மத்தைப் புரிந்துகொள்கிறார்கள். இன்னும் தீவிரமாகப் போராடுகிறார்கள். பிறகு, இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன்... அங்கு மாணவர்கள் யாரும் காலையில் எழுந்தவுடன் கற்களை எடுத்துக்கொண்டு கல்வி நிலையங்களுக்குச் செல்வதில்லை. அவர்கள் புத்தகங்களோடுதான் பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்கிறார்கள். கல்லூரிநேரம் முடிந்த பின்தான் போராட வருகிறார்கள். ஹூம்... எடுத்த உடனேயே எங்கள் மாணவர்கள் கற்களைக் கொண்டு போராட்டத்தைத் தொடங்கவில்லை. இந்த ஓராண்டில் மட்டும் ஏறத்தாழ 300 அமைதியான போராட்டங்கள், ஊர்வலங்கள் நடந்திருக்கின்றன. இதுகுறித்து யாரும் உங்களிடம் சொல்லியிருக்க மாட்டார்கள். அந்த சாத்வீகமான போராட்டங்களை அரசு, முறையாக அணுகி இருந்தால், எங்கள் மாணவர்களின் கைகளுக்கு கற்கள் போய் இருக்காது.''
“இந்தியா வஞ்சித்தது... இந்தியா கொல்கிறது என்கிறீர்கள்... ஆனால், காஷ்மீரத்து பண்டிட்டுகளுக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? நீங்களும் அதைத்தானே செய்திருக்கிறீர்கள்...?”
“நாங்கள் பண்டிட்டுகளுக்குத் துரோகம் இழைத்தோமா இல்லை, இந்தியா துரோகம் இழைத்ததா என்று காஷ்மீரில் வந்து பாருங்கள். பண்டிட்டுகள் காஷ்மீரிலிருந்து வெளியேற முடிவெடுத்தபோது, எங்கள் மக்கள்... நீங்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறீர்களே, அந்த மக்கள்... பண்டிட்டுகளிடம் சென்று, 'தயவு செய்து போகாதீர்கள்... இது உங்களுடைய ஊர்தான். உங்களுக்கு இங்கும் எங்கள் மனதிலும் இடம் இருக்கிறது' என்று அழைத்தார்கள். இப்போதும் அழைக்கிறார்கள். உண்மையில், காஷ்மீரிலிருந்து பண்டிட்டுகள் வெளியேறக் காரணம் இந்திய அரசுதான்.... இந்திய அரசு காஷ்மீரிகள் மீது மிகப்பெரிய வன்முறையை 90-களில் கட்டவிழ்த்துவிட்டு, மக்களைக் கொத்து கொத்தாக கொன்றொழித்தது.
இதற்கு காஷ்மீரிகள் எதிர்வினையாற்றிவிடுவார்களோ என்று அஞ்சிதான் பண்டிட்டுகள் வெளியேறினார்கள். அந்த அச்சத்தை விதைத்ததும் இந்திய அரசுதான். அந்த சமயத்தில், காஷ்மீர் கவர்னராக இருந்த ஜக்மோகன் மல்ஹோத்ரா, இவர் பி.ஜே.பி கட்சியைச் சேர்ந்தவரும் கூட... அவர்தான் 'காஷ்மீரிகள் கோபமாக இருக்கிறார்கள்... பண்டிட்டுகள் 6 மாத காலம் வெளியே செல்லுங்கள். நிலைமை சரியான பின் மீண்டும் நாங்களே அழைக்கிறோம்' என்றார். அவர்கள் வெளியே சென்றவுடன் அவர்களின் வீடுகள், ராணுவத்தால் - மத்திய ரிசர்வ் போலீஸ் படையால் ஆக்கிரமிக்கப்பட்டன. ஆனால், இந்த அநியாயங்களை நீங்கள் யாரும் பேசமாட்டீர்கள்... இன, வரலாறு பிணைப்புள்ள எங்களை பண்டிட்டுகளுக்கு எதிராகச் சித்தரிப்பீர்கள்.
ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏறத்தாழ 5 லட்சம் பேர் காஷ்மீர் வருகிறார்கள்... வணிகம் செய்கிறார்கள்... வேறு யார் யாரோ வரும் போது... எங்கள் மண்ணின் மக்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோமா...?
பிறகு, இன்னொன்றையும் இங்கே பதிய விரும்புகிறேன்... 1989 - 2003 வரையிலான காலகட்டங்களில், ஏறத்தாழ 209 பண்டிட்டுகள் காஷ்மீரத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதே காலகட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இந்திய அரசு பண்டிட்டுகளுக்காக கவலைப்படுவது போல அந்த எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கவலைப்படுவதும் இல்லை... பேசுவதும் இல்லை. இதிலிருந்தாவது புரிந்துகொள்ளுங்கள்... யார் வன்மமான அரசியல் செய்கிறார்கள் என்று”.
“சுயநிர்ணயம் என்பது காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்களின் கோரிக்கைதானே.... இன்னொரு இஸ்லாமிய அடிப்படைவாத தேசமாகத்தானே அது இருக்கும்...?”
மு.நியாஸ் அகமது
http://www.vikatan.com/news/coverstory/91386-an-interview-with-khurram-parvez.html