மன்னார்குடி குடும்பத்தை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த, பாஜக வகுத்த வியூகங்கள் அனைத்தும், சசிகலாவின் சாதுர்யத்தால் தவிடு பொடி ஆகிவிட்டது.
சசிகலா முதல்வர் பதவியில் அமராமல் இருக்க வேண்டும் என்பதற்காக, பன்னீரை பின்னால் இருந்து இயக்கியது டெல்லி. ஆனால், அனைத்து எம்.எல்.ஏ க்களையும் அலேக்காக கூவத்தூர் தூக்கி சென்றது சசிகலா தரப்பு.
பன்னீர்செல்வம் தரப்பினர் எவ்வளவோ முயன்றும், எம்.எல்.ஏ க்களை இழுக்க முடியாமல் போய்விட்டது. கட்சி நிர்வாகிகளையும் அவரால் கவர முடியாமல் போனது.
சொத்து குவிப்பு வழக்கில், சசிகலாவை பெங்களூரு சிறைக்கு அனுப்பினாலும், அவர் தனது தேர்வான எடப்பாடியையே முதல்வராக்கி விட்டு சென்றார்.
அடுத்து, கட்சியிலும், ஆட்சியிலும் எந்த வித இடையூறும் வந்துவிட கூடாது என்பதற்காக, தினகரனை துணை பொது செயலாளர் ஆக்கினார் சசிகலா.
சசிகலா நினைத்தது போலவே, கட்சி மற்றும் ஆட்சியை திறம்பட நிர்வகித்து தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அனைத்து வேலைகளையும் செய்து முடித்தார் தினகரன்.
அந்த நிலை தொடர்ந்தால், மன்னார்குடி கும்பலின் ஆதிக்கம் மீண்டும் தலை தூக்கி விடும் என்று நினைத்த டெல்லி, சசிகலா குடும்பத்தை ஒதுக்கி, இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியை தொடங்கியது.
ஆனால், இருதரப்பிலும் பேச்சுவார்த்தை என்று சொல்லி கொண்டே இருந்தார்களே தவிர, பேச்சுவார்த்தை தொடங்கவே இல்லை. தினகரன் இருக்கும் வரை, அணிகள் இணைய வாய்ப்பு இல்லை என்று தெரிந்ததால், வழக்கு தொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் பிறகும், அணிகள் இணைப்பை அரங்கேற விடாமல் பார்த்து கொண்டனர், தினகரன் ஆதரவு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ க்கள்.
எத்தனை வழக்குகளை வேண்டுமானாலும் போடுங்கள். ஆனால் எங்கள் தயவு இல்லாமல் அதிமுகவை அசைக்க முடியாது என்பது போல மறைமுகமாக தொடர்ந்து பதிலடி கொடுத்து கொண்டே இருந்தது சசிகலா தரப்பு.
இதனிடையே, அடுத்த மாதம் குடியரசு தலைவர் தேர்தல் வர இருப்பதால், அதிமுக எம்.எல்.ஏ, எம்.பி க்களின் வாக்குகளை வளைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பாஜக.
அதற்கு, பன்னீர், எடப்பாடி என யாரை கொம்பு சீவினாலும், பலன் கிடைக்க போவதில்லை என்பதை உணர்ந்தது டெல்லி மேலிடம். இதையடுத்து, தற்காலிகமாக டெல்லிக்கும் – சசிகலா குடும்பத்திற்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.
அதன்படி, குடியரசு தலைவர் தேர்தலில் அதிமுக எம்.எல்.ஏ, எம்.பி க்கள் வாக்குகள் அனைத்தும் பாஜகவுக்கு என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சசிகலா குடும்பத்தை சேர்ந்த யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்ற நிபந்தனையும் ஏற்கப்பட்டது.
அண்மையில், டெல்லி சென்ற சசிகலாவின் கணவர் நடராஜன், பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்து சமரசம் பேசி முடித்தார். அதை தொடர்ந்தே தினகரனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. சசிகலாவின் சீராய்வு மனுவுக்கும் சாதகமான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும், ஜாமினில் வெளிவந்த தினகரன், நடராசன் பேச்சை கேட்காமல் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்திருப்பது, டெல்லி மேலிடத்திற்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனினும், குடியரசு தலைவர் தேர்தல் முடியும் வரை, சற்று அமைதியாக இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால், பாஜக கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறது.
இதை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட தினகரன், தம்முடைய ஆதரவு எம்.எல்.ஏ க்களுடன் ஆலோசனை நடத்துவதும், பன்னீர் அணியில் உள்ள எம்.எல்.ஏ, எம்.பி க்களை மீண்டும் தம் பக்கம் இழுப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
என்னதான் வழக்குகள், சிறை என்று இழுத்தடிக்கும் வியூகங்களை பாஜக கையாண்டாலும், சசிகலா அவற்றை எல்லாம் சாதுர்யமாக முறியடித்துக் கொண்டே இருப்பது டெல்லியை ரொம்பவும் வெறுப்படைய வைத்துள்ளது.
ஆகவே, தற்போது, பல்லை கடித்துக் கொண்டு, அமைதி காக்கும் டெல்லி மேலிடம், குடியரசு தலைவர் தேர்தல் முடிந்தவுடன், தமது கை வரிசையை காட்டும். அப்போது அதிமுக ஆட்சி இருக்குமா? என்பதே சந்தேகம் என்கின்றனர் டெல்லிக்கு நெருக்கமானவர்கள்.
http://kaalaimalar.in/sasikala-modi-dinakaran-release-issue/