ஞாயிறு, 4 ஜூன், 2017

பிரமாண்டமாக நடந்து முடிந்தது கருணாநிதியின் வைர விழா! June 03, 2017




சட்டப்பேரவையில் திமுக தலைவர் கருணாநிதியின் 60 ஆண்டுகள் நிறைவையொட்டி வைர விழா, சென்னையில்  விமரிசையாக நடைபெற்றது.

கருணாநிதியின் 94வது பிறந்த நாள்,  சட்டப்பேரவையில் 60 ஆண்டுகள் நிறைவு செய்ததன் வைர விழா நிகழ்ச்சிகள், சென்னை ராயப்பேட்டை ஒ.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. விழாவில் பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, கோடிக்கணக்கான தமிழ் மக்களால் நேசிக்கப்படுபவர் கருணாநிதி என்றும், அவர் ஆற்றலும் அறிவும் ஒருங்கே பெற்றவர் என்றும், தனது பேச்சில் பாராட்டினார். மேலும், கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒரே கலாச்சாரத்தை திணிக்க முயலும் பாஜக அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ராகுல் காந்தி தனது உரையில் குறிப்பிட்டார்.

விழாவில் பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், சமூக நீதிக்காக அரும்பாடுபட்ட மிகப்பெரிய தலைவரான கருணாநிதி,  இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழ்வதாக புகழாரம் சூட்டினார். நாட்டை சீர்குலைக்க ஒரு கட்சி நினைப்பதாக குற்றஞ்சாட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, கருணாநிதியின் வழிக்காட்டுதல்கள் தற்போது தேவை என்றும் குறிப்பிட்டார்.

விழாவில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றில் பன்முகத்தன்மை கொண்டவர் கருணாநிதி என கூறினார். மதவெறி அரசியலை மக்கள் மீது திணிக்கும் ஆட்சி மத்தியில் நடப்பதாக சாடிய அவர், இத்தகைய ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா நிகழ்ச்சியில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி,  முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் டெரிக் ஓ பிரையன், தேசியவாத காங்கிரஸ் எம்.பி மஜீத் மேமன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Related Posts: