வெள்ளி, 7 ஜூலை, 2017

மருந்து தயாரிப்பு கம்பெனிகளில் இருந்து மருந்து, மாத்திரை சப்ளை நிறுத்தம்! July 07, 2017

மருந்து தயாரிப்பு கம்பெனிகளில் இருந்து மருந்து, மாத்திரை சப்ளை நிறுத்தம்!


ஜிஎஸ்டி வரி விதிப்பால் மருந்து தயாரிப்பு கம்பெனிகளில் இருந்து மருந்து, மாத்திரை சப்ளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உயிர்காக்கும் மருந்து மாத்திரைகள்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

அரசு தலையிட்டு மருந்து தட்டுப்பாட்டை போக்கவும் மருந்து வியாபாரத்தில் உள்ள சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு  ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு சதவிகிதத்தில் வரி நிர்ணியிக்கப்பட்டுள்ளது. 

மருந்து விற்பனையில் பொறுத்தவரையில் புரோட்டின் பவுடர், உணவு சம்பந்தமான பொருட்களுக்கு 18 சதவீதம் வரியும், நோய் குணமாக்கும் மருந்து, மாத்திரைகளுக்கு 12 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டுள்ளது. மருந்து வகைகளுக்கு ஐந்து சதவீதம் இருந்த வரி தற்பொழுது ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலம் 12 சதவீத வரி விதிப்பால் மிகுந்த சிரமத்தை  சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய கோளாறு போன்ற நோய்களுக்கு மாத்திரைகள் கிடைக்காமல்  மூன்று நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் சேலம் மாநகர மக்கள், மருந்து மாத்திரைகளை தேடி கடை கடையாக அலைய வேண்டிய நிலை உள்ளதாக வேதனையுடன் கூறுகின்றனர்..  இதனால் மருந்து கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருதாகவும் மருந்து, மாத்திரை கிடைக்க அரசு வழி வகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஜிஎஸ்டி வரி  விதிப்பால் இந்தியா முழுவதும் கடந்த 15 நாட்களாக தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து மருந்து, மாத்திரைகள்  விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.  இதனால்  மருந்து கடைகளில் இருப்பில் உள்ள மருந்து, மாத்திரை குறைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் விரைவில் முழுமையாக  மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என மருந்து விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  

சேலம் போன்ற மாவட்டங்களில்  அனைத்து மருந்து கடைகளிலும் இருப்பில் உள்ள மருந்து, மாத்திரைகளை மட்டுமே விற்பனை செய்துவருகின்றனர்.  இதே நிலைமை இன்னும் ஒரு வாரத்திற்கு நீடித்தால், இருப்பில் உள்ள அனைத்து மருந்து மாத்திரைகளும் விற்று தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் இதனால், சேலத்தில் உள்ள மருந்து கடைகளில் வழக்கத்தை காட்டிலும் விற்பனை வெகுவாக சரிந்துள்ளதாக கூறுகின்றார்கள் வியாபாரிகள்.

மொத்த விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அனைவரும் மென்பொருள்  உபயோகித்து பில் தயார் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மருந்து  விநியோகத்திலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது என கூறுகின்றார்  மருந்து விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் செந்தில் வடிவேல் இந்த நிலை இன்னும் சில தினங்களில் சரியாகிவிடும் என்கின்றார் .

உயிர் காக்கும் அவசர கால மருந்துகளின்  விலை அனைத்தும் உயர்ந்துள்ளதாக கூறும் மருத்துவர்கள் இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என  தெரிவித்தனர். 

ஜிஎஸ்டி வரியால் சிறிய அளவில் மருந்து கடை வைத்திருக்கும் விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நடை முறை சிக்கல்கள் எல்லாம் சரி செய்ய  உரிய கால அவகாசத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்பதே மருந்து கடை உரிமையாளர்களின் கோரிக்கை. 

Related Posts: