13 08 2021
திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆளும் கட்சியாக ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைகிறது. அதே போல, 10 ஆண்டுகளுக்கு பிறகு, அதிமுக எதிர்கட்சியாகி 100 நாட்கள் நிறைவடைகிறது. தமிழக அரசியலில் பெரும் தலைவரான கருணாநிதி மறைவுக்கு பிறகு, திமுக மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது. அதே போல, அதிமுகவும் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு மீண்டும் எதிர்க்கட்சி நிலைக்கு வந்துள்ளது. திமுகவின் 100 நாள் ஆட்சியை மதிப்பிடும் அதே நேரத்தில் அதிமுகவின் 100 நாள் எதிர்க்கட்சி செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதும் அரசியல் நோக்கர்களால் மதிப்பிடப்படுகிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தாலும் 66 இடங்களில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது.
அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இணைந்தது முதலே இருவருக்குமான பணிப்போர் போட்டிகள் தொடங்கி விட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு முதலமைச்சராக இருந்தபோது ஓ பன்னீர்செல்வம் ஸ்கோர் செய்திருந்தாலும், ஈபிஎஸ் முதலமைச்சராக தன்னை நிரூபித்தார். அதிமுகவில் ஓபிஎஸ்-ஐ இணைத்துக்கொண்டு சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் அதிமுகவில் இருந்து வெளியேற்றியதோடு, கட்சியில் இரட்டைத் தலைமையாக இருந்தாலும் தனது பிடியை முதன்மையாக வைத்துள்ளார்.
தமிழக அரசியலில் இருபெரும் துருவத் தலைவர்களாக ஜெயலலிதாவும் கருணாநிதியும் மாறி மாறி எதிர்க்கட்சி தலைவர்களாக செயல்பட்டுள்ளனர். அரசியலில் இருவரும் சரிக்கு சமமாக கவுண்ட்டர் கொடுத்து வந்தார்கள். ஆனால், இருவரின் மறைவுக்கு பிறகு, திமுக – அதிமுக இந்த 100 நாட்களில் எப்படி ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை அரசியல் நோக்கர்கள் மதிப்பிடுகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு வந்தார் என்றால், அடுத்த சில நாட்களில் அதிமுகவின் இரட்டைத் தலைமை ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து விட்டு வந்தனர்.
திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த திட்டங்களை நிறைவேற்ற வில்லை என்று அதிமுக போராட்டம் நடத்தியது. அதே நேரத்தில், தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகரான், கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்துவிட்டது என்று வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.
இதனிடையே, அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணியின் வீடு அவர் தொடர்புடைய 53 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுக தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இப்படி, கடந்த 100 நாட்களில் இந்த அளவில் அதிமுக எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்திருக்கிறது.
தமிழக அரசியலில் இந்த 100 நாட்களில் அதிமுக எந்த அளவுக்கு செயல்பட்டிருக்கிறது என்று பேராசிரியர் லட்சுமணன் கூறுகையில், “எதிர்க்கட்சியான அதிமுக மட்டுமல்ல, திமுகவும் பெரியதாக ஒன்றும் செயல்பட்டுவிடவில்லை. இருவருமே ஒரு தற்காப்பு ஆட்டம் (Safe game ) விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அதிமுக எதிர்க்கட்சியாக இந்த 100 நாட்களில் ஒன்றும் செய்துவிடவில்லை. நீட் தேர்வு, ஸ்டெர்லைட் ஆலை, 8 வழிச்சாலை ஆகிய விவகாரங்களில் இந்த 2 கட்சிகளும் தெளிவின்மையோடு இருக்கிறார்கள்.
இந்த 2 கட்சிகளுமே மத்திய அரசினுடைய செயல்பாடுகளுக்கு எதிராக எந்தவிதமான முன்னெடுப்பையும் முன்னெடுக்கவில்லை. இக்கட்சிகள் வளர்ச்சி என்ற பெயரில் பெரு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் ஆதரவாகவே இருக்கிறார்கள். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது மத்திய அரசை விமர்சித்தது போல, ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை மத்திய அரசுக்கு எதிராக எதையும் செய்துவிடவில்லை. நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன். நீ அழுகிற மாதிரி அழு என்று சொல்வதைப் போல திமுகவும் அதிமுகவும் அணுசரணையாகத்தான் அரசியல் செய்கிறார்கள். ஆனால், இருவரும் மக்கள் பிரச்னைகளில் மெத்தனமாகவே இருக்கிறார்கள். சென்னையில் குடிசைப் பகுதி மக்களை வெளியேற்றுவதில் அதிமுக – திமுக 2 கட்சிகளும் ஒரே மாதிரியாகத்தான் செயல்படுகிறார்கள்.” என்று கூறினார்.
திமுகவின் 100 நாள் ஆட்சி மீது விமர்சனங்கள் வைக்கப்படுகிற அதே நேரத்தில் அதிமுக பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டிருக்கிறதா என்றால் அதன் செயல்பாடு போதுமான அளவு இல்லை என்பதே விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. அதிமுகவுக்குள் ஓபிஎஸ் – ஈபிஎஸ் செயல்பாடு என்பது இப்போது இருவரும் ஒரளவு இணைந்து செயல்படுவதாகவே அதிமுக வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.
source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-aiadmk-safe-game-playing-in-100-days-after-new-govt-formed-332174/