நாட்டில் 15 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நாடுமுழுவதும் நேற்று தொடங்கியது. முதல் நாளில் இரவு 8 மணி நிலவரப்படி 40 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறார் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
அதன்படி, தமிழகத்தில் 3.32 லட்சம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டில் பின்தங்கிய மாவட்டங்களான திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகியவை 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக, முதல் நாளிலே 10 சதவீதம் கவரேஜ்ஜை பெற முடிந்தது. ஆனால், கொரோனா பாதிப்பில் மீண்டும் முன்னிலை வகிக்க தொடங்கிய தலைநகர் சென்னையில், மிகவும் குறைவான அளவிலே சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தகுதியான 33.46 லட்சம் சிறார்களில் 3.32 லட்சம் பேர் கோவாக்சினின் முதல் டோஸை பெற்றனர். அதிகபட்சமாக, திருவண்ணாமலை தனது இலக்கில் 22.3% தடுப்பூசியை செலுத்தியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கள்ளக்குறிச்சி 21% தடுப்பூசி செலுத்துதல் பதிவாகியுள்ளது. சிங்கார சென்னையில் வெறும் 1.44% மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு, மோசமான செயல்திறனைப் பதிவு செய்தது.
சிறந்த செயல்திறன் கொண்ட மாவட்டங்களில் தடுப்பூசி பணி 5 நாள்களுக்குள் முடிவடைய வாய்ப்புள்ளதாகவும், ஆனால் சென்னையில் சிறார் தடுப்பூசி பணி முடிவடைய 70 நாள்கள் கூட ஆகலாம் என கூறுகின்றனர்.
சென்னை அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாக இல்லை. அங்கு, முறையே 6.45 சதவீதமும், 6.74 சதவீதமும் தான் பதிவாகியுள்ளது. இத்துடன் ஒப்பிடுகையில், காஞ்சிபுரம் 11.45 சதவீதம் சிறார் தடுப்பூசி பதிவு செய்து ஒரிடம் முன்னிலை வகிக்கிறது.
மற்றொரு முக்கிய மாநகராட்சி கோவையிலும், சிறார் தடுப்பூசி பணி சிறப்பாக இல்லை. அதன் இலக்கில் வெறும் 6.82 விழுக்காடு மட்டுமே பதிவு செய்துள்ளது. மொத்தமாக, 16 மாவட்டங்கள் ஒற்றை இலக்க கவரேஜை மட்டுமே பதிவு செய்துள்ளன.
சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்த முதல்வர், தடுப்பூசி போட மக்கள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அப்போது பேசிய அவர், ஒமிக்ரான் குறைந்த தீவிரத்தன்மையைக் கொண்டிருந்தாலும், அது வேகமாகப் பரவுக்கூடியது. அதிகமான மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, மாஸ்க் மற்றும் சமூக இடைவேளியை கடைப்பிடிப்பது அவசியமாகும் என்றார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/vax-drive-for-kids-chennai-at-the-bottom-as-tamil-nadu-covers-10pc-392071/