வியாழன், 6 ஜனவரி, 2022

கொரோனா பாதிப்பு… யாருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை தேவை? அரசு விளக்கம்

 6 1 2022  இந்தியாவில் கொரோனா 3வது அலை உருவெடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் நேற்று 4, 862 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர். 688 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 16,577 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்தவரை நேற்று மட்டும் 2,481 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 7, 878 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதாகவும், தொற்று அறிகுறி குறைவாக அல்லது அறிகுறியற்றவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள் என மூத்த சுகாதர அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

வரும் நாட்களில் தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், போதுமான ஆக்ஸிஜன் இருப்பதாகவும், நிலைமையை கையாளத் தயாராக இருப்பதாகவும் அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

“கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளுக்கும், தொற்று அல்லாத அவசர நோயாளிகளுக்கும் மட்டுமே நாங்கள் தற்போது சிகிச்சை அளித்து வருகிறோம். அதேசமயம் அறிகுறி இல்லாதவர்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறார்கள். ஏற்கனவே சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை ஒரு வாரத்தில் மாற்ற முயற்சி செய்து வருகிறோம்.

தற்போது, புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட 50 நபர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்களில் சிலருக்கு ​​ஒமைக்ரான் தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், லேசான அறிகுறிகளைக் கொண்ட சிலரையும் கண்காணிப்புக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்” என்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் மருத்துவர் ஆர் சாந்திமலர் கூறியுள்ளார்.

கோவிட் நோயாளிகள் நான்காவது அல்லது ஐந்தாவது நாளில் எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை என்றால், அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஒரு வாரத்திற்கு வீட்டுத் தனிமைப்படுத்தலைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என மருத்துவர் சாந்திமலர் கூறியுள்ளார்.
மேலும், பேசிய அவர், “தற்போது, ​​ஆக்ஸிஜனுக்கான தேவைகள் அதிகம் இல்லை. ஆனால் வரும் நாட்களில் தொற்று பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், போதுமான இருப்புடன் நாங்கள் தயாராக இருக்கிறோம், ”என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் குறைந்தபட்சம் 5 லட்சம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளாத நிலையில் உள்ளனர். அவர்கள் லேசான அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் அல்லது அறிகுறியற்றவர்களாக இருப்பதால் தடுப்பூசி போடப்பட்டவர்களுடன் ஒப்பிடும்போது அவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனைகள் கடந்த வாரத்தில் அதிக எண்ணிக்கையிலான தொற்று பாதிக்கப்பட்டவர்களை அனுமதித்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பேசியுள்ள ஜெனரல் மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சபரீசன், “கொரோனா தொற்று அதிகரிக்கும் போது, ​​முதலில் நோய்த்தொற்று ஏற்படுவது சுகாதாரப் பணியாளர்கள்தான். எனவே மருத்துவமனையில் உள்ள தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்துள்ளோம்.

மேலும் தடுப்பூசி போடப்பட்டவர்களுடன் ஒப்பிடுகையில், தடுப்பூசி போடாதவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். ஒரு நோயாளிக்கு இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல், சளி, இருமல் அல்லது தொண்டை புண் போன்ற அறிகுறிகள் இருந்தால், அவர்களின் உடல்நிலை மோசமாக மாறாது என்பதால், கொரோனா பரிசோதனையை பரிந்துரைக்கிறோம்.

எங்கள் மருத்துவமனையில் சுமார் 20 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைவருக்குமே லேசான அறிகுறிகளுடன் உள்ளனர். அதே நேரத்தில் ஜனவரி 1க்குப் பிறகு தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய உயர்வு ஏற்பட்டது. மூன்றாவது அலையைக் கையாள, எங்களது மருத்துவமனையானது கொரோனாவுக்காக தனி வார்டுகளையும், தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும் போது அவசரகாலச் சூழ்நிலைகளைக் கையாள ஒரு மருத்துவக் குழுவையும் அமைத்துள்ளது.” என்று கூறியுள்ளார்.

நாட்டில் சில மாநிலங்களில் வார நாட்களில் மற்றும் வார இறுதி நாட்களில் முழுஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நாளை முதல் (டிசம்பர் 6) மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கும், டிசம்பர் 9-ந் தேதி முதல் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/covid-19-tamil-news-symptomatic-patients-only-can-admitted-in-chennai-hospitals-says-tn-govt-393239/