வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

இந்தியாவில் ஆளுநருக்கான அதிகாரங்கள் என்ன? மாநில அரசுகளுடன் அடிக்கடி பிணக்கு ஏற்பட காரணம் என்ன?

 Governors powers : கடந்த வாரம் மேற்கு வங்க முதல்வர் மேற்கு வங்க ஆளுநர் ஜெக்தீப் தன்கரை ட்விட்டரில் “ப்ளாக்” செய்தார். அரசியல் அமைப்பிற்கு புறம்பாக அவர் வெளியிடும் கருத்துகள் மற்றும் அதிகாரிகளை அவரின் வேலையாட்கள் போல் நடத்துவது போன்ற காரணங்களால் நான் அவரை ப்ளாக் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டேன் என்று கூறினார். அதனை தொடர்ந்து தன்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஜனநாயகத்தின் இறையாண்மையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு ட்வீட்களை பதிவு செய்து முதல்வர் மமதா பானர்ஜீ தான் அரசியலமைப்பிற்கு மாறாக உள்ளது என்று கூறினார்.

குடியரசு தின நிகழ்வின் போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் தேர்வால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசியது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று தமிழக அரசு மசோதாவை நிறைவேற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பிய நிலையில் அவர் அவ்வாறு பேசினார். பிறகு அந்த மசோதாவை சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பி வைத்தார் ஆளுநர். இரண்டாவது முறையாக சிறப்பு கூட்டத்தின் மூலம் மீண்டும் நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றியது. அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே இருக்கும் பிணக்கிற்கு இது இரண்டும் சிறு உதாரணம்.

ஆளுநர் – மாநில அரசுகளின் உறவுகள் குறித்து அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டிருப்பது என்ன?

அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின்படி செயல்பட வேண்டிய அரசியல் சார்பற்ற தலைவராக கருதப்பட்டாலும், மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது நிறுத்தி வைப்பது அல்லது அதற்குத் தேவையான நேரத்தை நிர்ணயிப்பது போன்ற அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்ட சில அதிகாரங்களை ஆளுநர் அனுபவிக்கிறார். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளும் கட்சியை அழைப்பதும், ஆட்சி அமைக்க எந்த கட்சியை அழைக்கலாம் என்பது போன்ற முடிவுகளும் அவர் கையில் தான் உள்ளது.

ஆனால், கருத்து வேறுபாடுகள் இருக்கும்போது ஆளுநரும் அரசும் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பான பிரிவுகள் ஏதும் அரசியல் அமைப்பில் இல்லை. வேறுபாடுகளை நிர்வகித்தல் பாரம்பரியமாக ஒருவருக்கொருவர் எல்லைகளுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் வழிநடத்தப்படுகிறது.

இதுவரை ஏற்பட்ட சிக்கல்கள் என்ன?

சமீப ஆண்டுகளில், இவை பெரும்பாலும் அரசாங்கத்தை அமைப்பதற்கான கட்சியைத் தேர்ந்தெடுப்பது, பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான காலக்கெடு, மசோதாக்களை நிறுத்தி வைப்பது மற்றும் ஆளும் அரசின் நிர்வாகத்தை எதிர்மறையாக விமர்சனம் செய்வது ஆகியவற்றை உள்ளடக்கியே செயல்படுகிறது.

நவம்பர் மாதம், 2018ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் ஆளுநர், பல்வேறு கட்சிகள் கூட்டாக ஆட்சி அமைக்க விரும்புவதாக தெரிவித்த போதும், அம்மாநில சட்டசபையைக் கலைத்தார். அது பின்னர் அந்த மாநிலத்தை இரண்டாக பிரிக்க வழிவகை செய்தது.

நவம்பர் 2019 இல், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில் ஆளுநர் பகத் சிங் கோஷியாரி தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜகவை ஆட்சி அமைக்க அமைத்தார். ஆனால் அந்த ஆட்சி 80 மணி நேரங்கள் கூட நீடிக்கவில்லை. உத்தவ் தாக்கரேவை நியமிக்க அவர் மறுப்பு தெரிவித்த நிலையில் பிரதமரை நாடினார் தாக்கரே.

மேற்கு வங்கத்தில், சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியல் வன்முறை குறித்து தன்கர் அடிக்கடி கருத்து தெரிவித்து வருகிறார். ரவி, நாகாலாந்து ஆளுநராக முன்பு இருந்தபோது, மாநில விவகாரங்களை விமர்சித்து நிர்வாகத்தில் தலையிட்டதாகக் கூறப்படுகிறது.

டிசம்பர் மாதம் 2020 அன்று கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் மூன்று வேளாண் சட்டங்கள் குறித்த சிறப்பு அமர்வில் விவாதிக்க வேண்டும் என்று எழுப்பிய மாநில அரசின் கோரிக்கையை அவர் நிராகரித்தார். 2018ஆம் ஆண்டு கர்நாடகா தேர்தலை அடுத்து, ஆளுநர் வஜுபாய் வாலா, பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார், பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்தார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் வழக்கு தொடர்ந்ததால், அது 3 நாட்களாக குறைக்கப்பட்டது.

இது சமீபத்தில் தான் நடைபெறுகிறதா?

மாநில அரசுகளை சீர்குலைக்க ஆளுநர்களை ஆளும் மத்திய அரசு பயன்படுத்திக் கொள்கிறது என்பது போன்ற குற்றச்சாட்டுகளை பல ஆண்டுகளாக மாநில அரசுகள் கூறி வருகின்றன. இத்தகைய குற்றச்சாட்டுகள் 1950களில் இருந்தே இருக்கிறது என்று கூறலாம். 1959ம் ஆண்டு கேரளாவின் இ.எம்.எஸ் நம்பூத்ரிபாத் அரசு ஆளுநர் அறிக்கையின் பெயரில் கலைக்கப்பட்டது.

1971 மற்றும் 1990 க்கு இடையில் ஆளுநர்களால் வழங்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி ஆணைகள் 63 உட்பட பல மாநில அரசாங்கங்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளன.

இதில் ஹரியானாவில் பிரேந்தர் சிங் அரசாங்கமும் அடங்கும் (1967); கர்நாடகாவில் வீரேந்திர பாட்டீல் அரசாங்கம் (1971); தமிழ்நாட்டில் மு கருணாநிதி அரசு (1976); ராஜஸ்தானில் பி எஸ் ஷெகாவத் அரசு மற்றும் பஞ்சாபில் எஸ்ஏடி அரசு (1980); உ.பி., ஒடிசா, குஜராத் மற்றும் பீகாரில் ஜனதா கட்சி அரசாங்கங்கள் (1980); ஆந்திராவில் என் டி ராமராவ் அரசு (1984); உ.பியில் 1992, 1998 ஆண்டுகளில் கல்யாண் சிங் தலைமையிலான அரசு கலைக்கப்பட்டது. மத்தியில் கூட்டணி ஆட்சியின் போதும், வலுவான பிராந்தியக் கட்சிகள் தோன்றிய காலத்திலும் இத்தகைய சம்பவங்கள் வெகுவாக குறைந்தன.

இந்த நிகழ்வுகள் நடைபெற காரணம் என்ன?

ஏனென்றால் ஆளுநர்கள் அரசியல் நியமனம் பெற்றவர்களாக மாறிவிட்டனர் என்று NALSAR தலைவரும் அரசியலமைப்பு நிபுணருமான பைசான் முஸ்தபா கூறினார். அரசியல் நிர்ணய சபை, ஆளுநர் அரசியலற்றவராக இருக்க வேண்டும் என்று எண்ணியது. ஆனால் அரசியல்வாதிகள் ஆளுநர்களாகி பின்னர் தேர்தலில் போட்டியிட ராஜினாமா செய்கிறார்கள்.

விதி செண்டர் ஃபார் லீகல் பாலிசி அமைப்பில் அரசியல் சாசன நிபுணர் அலோக் பிரசன்னா, “மக்களுக்கு முதல்வர் பதில் கூற கடமைப்பட்டிருப்பவர். ஆனால் ஆளுநர் மத்திய அரசைத் தவிர வேறு யாரிடமும் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. அரசியலமைப்பு நெறிமுறைகள் மற்றும் மதிப்புகள் பற்றிய யோசனைகளுடன் நீங்கள் அதனை அலங்கரித்துக் கொள்ளலாம். ஆனால் அரசியலமைப்பில் ஒரு அடிப்படை குறைபாடு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய எந்த விதியும் இல்லை. ஆளுநரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் இருக்கும் நிலையில், குடியரசுத் தலைவரின் விருப்பம் வரை மட்டுமே அவர் பதவியில் இருக்க முடியும்.

2001 ஆம் ஆண்டில், ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி எம்.என். வெங்கச்சலியாவின் தலைமையில், அடல் பிஹாரி வாஜ்பாயினால் அமைக்கப்பட்ட அரசியலமைப்பின் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்வதற்கான தேசிய ஆணையம், “ஆளுநர் தன்னுடைய நியமனம் மற்றும் பதவியில் நீடிப்பது மத்திய அரசின் கையில் உள்ளது. மத்திய அமைச்சர்கள் குழுவிடமிருந்து வரும் அறிவுறுத்தல்கள் ஏதேனும் இருந்தால், அதன்படி செயல்படுவார்களோ அச்சம் மாநில அரசுகளிடம் உள்ளது. உண்மையில் இன்றைய ஆளுநர்கள் மத்திய அரசின் ஏஜெண்ட்டுகள் என்று இழிவாக அழைக்கப்படுகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தது.

அரசமைப்புச் சட்டத்தில், முதல்வரை நியமிப்பது அல்லது சட்டசபையைக் கலைப்பது உட்பட ஆளுநரின் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை. ஒரு மசோதாவுக்கு ஆளுநர் எவ்வளவு காலம் ஒப்புதலைத் தடுத்து நிறுத்தலாம் என்பதற்கு வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

என்ன சீர்திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன?

1968 நிர்வாக சீர்திருத்தக் கமிஷன் முதல் 1988 சர்க்காரியா கமிஷன் மற்றும் மேலே குறிப்பிட்டது வரை, பிரதமர், உள்துறை அமைச்சர், நாடாளுமன்ற மாநிலங்களவை சபாநாயகர் மற்றும் முதல்வர் ஆகியோர் அடங்கிய குழு மூலம் ஆளுநரை தேர்ந்தெடுப்பது போன்ற சீர்திருத்தங்களை பரிந்துரைத்துள்ளது. அவரது பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். பேரவையில் ஆளுநரை பதவி நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்தும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை எந்த அரசும் இந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளவில்லை.

source https://tamil.indianexpress.com/explained/governors-powers-friction-with-states-and-why-this-happens-often-409401/