சனி, 12 பிப்ரவரி, 2022

யோகிக்கு எதிராக களம் இறங்கிய முன்னாள் தலைவர்களின் குடும்பத்தினர்

 11 2 2022 

Uttar Pradesh Polls 2022

Lalmani Verma 

Uttar Pradesh Polls 2022 : உபேந்திர தத் சுக்லா தன்னுடைய அரசியல் பயணத்தை ஏ.பி.வி.பி.-யில் இருந்து துவங்கினார். அடுத்த 40 வருடங்கள் பாஜகவிற்காக கடுமையாக உழைத்தார். பின்பு கோரக்பூர் பகுதியின் பாஜக தலைவராகவும், பின்னாளில் உ.பி. பாஜக துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றார். யோகி ஆதித்யநாத் முதல்வராக தேர்வு செய்யப்பட அவரது, காலியான மக்களவை தொகுதியில் போட்டியிடவும் செய்தார் சுக்லா.

இத்தனைக்குப் பிறகும், அவரது மறைவுக்கு பிறகு அவரின் குடும்ப உறுப்பினருக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க பாஜக என்ன தான் எதிர்பார்க்கிறது என்ற கேள்வியை முன்வைக்கின்றனர் சுக்லாவின் குடும்பத்தினர். பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்புகள் மறுக்கப்படவும், சுக்லாவின் குடும்பத்தினர் சமாஜ்வாடி கட்சியில் இணைய, சுக்லாவின் மனைவி சுபாவதி சுக்லா, கோரக்பூர் நகர்ப்புற தொகுதியில், மாநில முதல்வர் யோகியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இந்த கட்சியில் சுக்லாவின் மகன் அமித்திற்கு கட்சி பதவி தருமாறு கேட்கப்பட்ட நிலையில் சுபாவதியை போட்டியிட அழைத்திருக்கிறது சமாஜ்வாடி. ”இறந்து போன கட்சித் தலைவர்களின் குடும்பத்தினரை” பாஜக கண்டு கொள்வதில்லை என்றும் அதற்காக அவர்களின் கட்சியில் எந்த விதமான கொள்கையும் இல்லை என்றும் குற்றம் சுமத்துகின்றனர்.

வியாழன் அன்று சுபாவதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் முன்னதாகவே மூத்த மகன் அரவிந்த் அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் செய்து முடித்தார். லக்னோவிற்கு சென்ற அமித் , அமித் SP அலுவலகத்தில் இருந்து தேவையான சின்னத்தின் கடிதத்தைப் பெற்றார். தனக்கு தெரிந்த வாழ்வில் இருந்து வெகு தொலைவில் அமைந்திருக்கும் உலகம் இது என்று ஒப்புக் கொண்ட சுபாவதி, சுக்லா உயிருடன் இருக்கும் போதும் அரசியல் வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கியே இருந்தவர்.

பாஜகவின் கொள்கைகள் குறித்து அவர் பேசுவதை நான் கேட்பேன். 62 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட கோரக்பூர் பிராந்தியத்தில் நடைபெறும் தேர்தல்களில் சுக்லாவின் பங்கு எத்தகையது என்பதை நான் உணர்ந்திருந்தேன் என்று கூறும் அவர் ஒரு போதும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இருந்ததில்லை என்று கூறினார் சுபாவதி. சுக்லா இறந்த பிறகு கடந்த ஒரு வருடமாக வீட்டில் இருந்து வெளியேறுவதை முற்றிலுமாக தவிர்த்து வந்தார் சுபாவதி.

யோகி ஆதித்யநாத்தின் பூர்வீகமான கோரக்நாத் மந்திருக்கு அருகே 7 கி.மீ தொலைவில் தன்னுடைய பிரச்சாரத்தை துவங்கிய சுபாவதி, புதன்கிழமை அன்று, பாஜகவால் அவமதிக்கப்பட்ட, இறந்து போன தன்னுடைய கணவர் சுக்லாவிற்கு கௌரவம் செலுத்துங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார் சுபாவதி.

முன்னதாக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த அரவிந்த், தன்னுடைய தந்தை இறந்த பிறகு பாஜக அவரின் தந்தையின் பங்களிப்பை நினைப்பதையும் குறைத்துக் கொண்டது என்று கூறினார். இந்த குறிப்பிட்ட காலத்தில் பல தடவை கோரக்பூருக்கு வந்த யோகி ஒரு முறை கூட தன்னுடைய இரங்கலை தெரிவிக்க எங்களின் வீட்டிற்கு வரவில்லை. ஒரே ஒரு முறை தொலைபேசியில் பேசியதோடு சரி என்று கூறினார். பாஜக மாநில தலைவர் சுவதந்திர தேவ் சிங் என்னுடைய தந்தை இறந்து 6 மாதங்கள் கழித்து எங்களின் வீட்டிற்கு வந்தார் என்று கூறினார் அமித். டெல்லியில் உள்ள தலைவர்களுடன் ஒப்பிடுகையில் இவர்களைக் காட்டிலும் சிறப்பாக நடந்து கொண்டனர் என்றும் கூறினார் அவர்.

எங்கள் தந்தையின் மறைவுக்குப் பிறகு அர்ப்பணிப்புள்ள சிப்பாய்களாக பாஜகவுக்காக தொடர்ந்து நாங்கள் பணியாற்றினோம் என்றும் அரவிந்தும் அமித்தும் கூறுகின்றனர். ஆனால் இறந்த தலைவர்களின் குடும்பத்தினருக்கு கட்சியில் பங்காற்ற ஒன்றும் இல்லை என்ற நிலை வந்ததுவிட்டது என்றும் அவர்கள் கூறினர்.

அகிலேஷ் யாதவ் அவர்களை சந்தித்து தனது தந்தை மற்றும் சுபாவதி இருவருக்கும் மரியாதை செலுத்தினார் என்று அரவிந்த் கூறுகிறார். லக்னோவில் அகிலேஷ் யாதவை சந்தித்துவிட்டு வீடு திரும்பிய போது ஜனவரி 18ம் தேதி அன்று உள்ளூர் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் எங்களை வரவேற்க காத்திருந்தனர் என்றும் தெரிவித்தார்.

சுபாவதி ஒரு சமூக சேவகரின் மனைவி என்பதில் இருந்து ஒரு சமூக சேவகியாக மாறுவதற்கு தயாராக இருக்கிறார். பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக அவர் தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்வார். குறுகிய சாலைகள் மற்றும் சரியான வடிகால் அமைப்பு இல்லாதது ஆகியவை நாங்கள் எழுப்பும் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகும் என்று தன்னுடைய தாய் சார்பாக பேசினார் அரவிந்த்.

பாஜகவில் இருந்து சமாஜ்வாதி கட்சிக்கு குடும்பம் மாறுவதை மக்கள் ஏற்காதது குறித்து அவர் பயப்படவில்லை என்று கூறிய அவர் சித்தாந்தங்கள் கொடிகளுடனும், பேனர்களுடனும் நின்றுவிடுவதில்லை. அது இதயத்தில் இருக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் எஸ்பிக்காக பணியாற்றுவோம் என்றும் அவர் கூறினார்.

பாஜகவின் வேட்பாளர் முதல்வராக இருப்பதால், நாங்கள் இங்குள்ள ஒரு அமைப்புக்கு எதிராக போராடுகிறோம் என்று வெற்றிக்கான வாய்ப்பு குறித்து அவர் தெரிவித்தார்.

2017ம் ஆண்டு எஸ்.பி. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தபோது, அவர்களின் வேட்பாளர் 28.21% வாக்குகளைப் பெற்றிருந்தார். இது பாஜகவின் 56%-ல் பாதி மட்டுமே. கோரக்பூர் மாவட்டத் தலைவர் அவதேஷ் யாதவ் கூறுகையில், சுக்லாவின் பெயரும் அவரது பிராமண அடையாளமும் சுபாவதிக்கு உதவியாக இருக்கும் என்று நம்புவதாக கூறினார்.

ஆனாலும் பிராமண வாக்குகள் இங்கே பிளவு படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன்ன. காங்கிரஸ் வியாழக்கிழமை அன்று சேத்னா பாண்டேவை கோரக்பூர் நகர்ப்புற தொகுதியில் களம் இறக்கியுள்ளது. காங்கிரஸால் வியாழன் அன்று அறிவிக்கப்பட்ட 33 வேட்பாளர்களில் 15 பேர் பெண்கள். அதில் சேத்னாவும் ஒருவர்.

பாடகரும், கவிஞருமான சேத்னா, கோரக்பூர் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவராகவும், சமூக சேவகராகவும் இப்பகுதியில் செயல்பட்டு வருகிறார். சீட்டுக்கான போட்டியில் அவரும் இருப்பது தெரிய வந்தது.

கோரக்பூர் நகர்ப்புற தொகுதியில் போட்டியிடும் மற்றொருவர் பீம் ஆர்மியின் சந்திரசேகர் ஆசாத். கோரக்பூர் நகர்ப்புறத்தில் பெரும்பான்மையான வாக்காளர்கள் தலித் மற்றும் இஸ்லாமியர்கள். இவர்களின் எண்ணிக்கை 45,000 ஆகும். தாக்கூர்கள் சுமார் 20,000 மற்றும் பிராமணர்கள் 18,000 பேர் உள்ளனர். குர்மிகள், மௌரியர்கள், ராஜ்பார்கள், சவுகான்கள், நிஷாத்கள் மற்றும் படேல்கள் போன்ற ஓபிசிக்களும் அதிக அளவில் கோரக்பூர் நகர்ப்புற தொகுதியில் வசித்து வருகின்றனர்.

சுக்லா குடும்ப உறுப்பினர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்பது தவறான கருத்து என்று மறுத்த பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ராகேஷ் த்ரிபாதி, உபேந்திர் பாஜகவின் அர்பணிப்பு மிக்க தலைவராக இருந்தார். அதனால் தான் அவரை பாஜக மாநில துணைத் தலைவராக நியமித்தது. யோகிக்காக அவர் தேர்தலில் பணியாற்றினார். அவரை பாஜக எப்போதும் மதிக்கிறது. அவருடைய குடும்ப உறுப்பினர்கள் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்திருப்பது, அவரது ஆத்மாவிற்கு ஏமாற்றத்தையே அளிக்கும். அவர்கள் சுயநலத்திற்காக பாஜகவில் இருந்து வெளியேறினார்கள். தோல்வி அடைந்ததும் அவர்கள் தாங்கள் செய்த தவற்றை உணருவார்கள் என்று கூறினார்.

ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட வாய்ப்புகளை தொடர்ந்து தொண்டர்கள் கேட்கின்றனர். ஒருவருக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்படும் போது மற்றவர்கள் கட்சியை விட்டு செல்லக் கூடாது என்று வாய்ப்பு மறுப்பு குறித்து அவர் குறிப்பிட்டார்.

–with inputs by Maulshree Seth

source https://tamil.indianexpress.com/india/uttar-pradesh-polls-2022-long-time-bjp-workers-family-alleges-insult-joins-race-against-yogi/