உளவுத் துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய உளவுத் துறை ஐஜியாக கே.ஏ.செந்தில்வேலன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், காவல் துறை அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் கே.பணீந்திர ரெட்டி இன்று வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கே.ஏ.செந்தில் வேலன், ஐபிஎஸ், மத்திய அரசுப் பணியில் சமீபத்தில்தான் மாநில அரசுப் பணிக்கு திரும்பியிருந்தார். அவர் உளவுத் துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக தேஷ்முக் சேகர் சஞ்சய், ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் துறை துணைக் கண்காணிப்பாளராக இருந்த சமய் சிங் மீனா, காவல் துறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். அவருக்கு உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி எக்ஸ் பட்டாலியனில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை துணைக் காணிப்பாளர் டி.வி.கிரண் ஸ்ருதி ஐபிஎஸ், காவல் துறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். ஈரோடு மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் தீபக் சிவச் ஐபிஎஸ், ஆவடி டிஎஸ்பி வி பட்டாலியன் எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.
விழுப்புரம் மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் ஐபிஎஸ், வட சென்னை துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். வி.வி.சாய் பிரனித்- பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாகவும், மகேஷ்வரன்- மாநில மனித உரிமைகள் ஆணைய பிரிவு எஸ்பியாகவும், ஆல்பர்ட் ஜான்- சென்னை பூக்கடை காவல்துறை துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டனர்.
எஸ்.ராதாகிருஷ்ணன் – தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய எஸ்பியாகவும், கண்ணன்- காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு உதவி ஐஜியாகவும் நியமிக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனியாமூர் கலவரம் உளவுத் துறையின் தோல்வி என விமர்சனம் எழுந்துள்ள நிலையில், உளவுத் துறை ஐஜி ஆசியம்மாள் வேறு பொறுப்புக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
source https://news7tamil.live/intelligence-ig-action-change-new-responsibilities-for-12-police-officers.html