வெள்ளி, 29 ஜூலை, 2022

அடுத்தடுத்து நடக்கும் கொலை.. பதற்றத்தில் கர்நாடகா..!

 

கர்நாடக மாநிலத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது 23 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பாஜக இளைஞரணியைச் சேர்ந்த பிரவீன் நெட்டர் (32) என்பவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இது அந்த மாநிலத்தில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சாகீர் மற்றும் முகமது சஃபீக் என்னும் இருவரை கர்நாடகா போலீஸ் கைது செய்திருக்கிறது. இந்த சம்பவம் நடைபெற்ற இரண்டே நாள்களில் மங்களூர் மாவட்டம், சுரத்கல் பகுதியில் 23 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாசில் என்ற முஸ்லிம் இளைஞரை நேற்று இரவு அடையாளம் தெரியாத 3-4 இளைஞர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இது அங்கு மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மங்களூர் சிட்டி போலீஸ் கமிஷனர் சஷிகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இரவு 8 மணியளவில் சில மர்ம நபர்கள் பாசிலை பயங்கர ஆயுதங்களுடன் கடுமையாக தாக்கியுள்ளனர். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இது மிகவும் பதற்றமான பகுதி. அதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொலையான பாசிலுடன் வந்த ஒருவர் இந்த சம்பவத்தை நேரில் பார்த்திருக்கிறார். அவரிடம் புகார் வாங்கியிருக்கிறோம்.
அவரை கொலை செய்தவர்கள் யார், உள் நோக்கம் என்ன போன்றவை குறித்து விசாரித்து வருகிறோம்.

இந்த சம்பவம் தொடர்பாக மக்கள் யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இன்று ஒருநாள் மங்களூர் மாநகரில் உள்ள அனைத்து மதுபானக்கடைகளும் மூட சொல்லி உத்தரவிட்டிருக்கிறோம். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதால், முஸ்லிம் தலைவர்களை வீட்டில் இருந்தபடியே தொழுகையில் ஈடுபட சொல்லியுள்ளோம். விரைந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

-ம.பவித்ரா

source https://news7tamil.live/23-year-old-muslim-man-killed-in-mangaluru-section-144-imposed.html