கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே பிளஸ் 2 படித்து வந்த மாணவி தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தமிழகத்தில் ஜூலை மாதத்தில் நடந்த 4-வது தற்கொலை சம்பவமாக பதிவாகியுள்ளது. இது குறித்து பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள் கல்வியை வியாபாரமாக இல்லாமல் சேவையாக செய்து மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே கடந்த திங்கள்கிழமை இரவு (ஜூலை 25) பிளஸ் 2 படித்து வந்த சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவி திங்கள் கிழமை தேர்வு எழுதிவிட்டு வந்ததாகவும், தேர்வு நன்றாக எழுதவில்லை என்பதால் மாணவி சற்று மன உலைச்சலில் இருந்தாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே மாணவி நீண்ட நேரமாகியும் தனது அறையை விட்டு வெளியே வராத நிலையில், பெற்றோர்கள் அறை கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக கடலூர் காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்தி கணேசன் கூறுகையில், செவ்வாய்க்கிழமை காலை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்து சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 174 (தற்கொலை குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க காவல்துறை) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
இந்த தற்கொலை சம்பவம் தமிழகத்தில் ஜூலை மாதம் நிகழும் 4-வது சம்பவமாகும். ஏற்கனவே ஜூலை 6 ஆம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்டார், அவர் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 12-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாவட்டம் முழுவதும் போராட்டம் வெடித்தது.
ஒரு கட்டத்தில் இந்த போராட்டம் வன்துறையாக மாறிய நிலையில், போராட்டக்காரர்கள் தனியார் பள்ளியை சூறையாடினர், மேலும் மூத்த போலீஸ் அதிகாரிகள் உட்பட பலர் பலத்த காயமடைந்தனர்.
அதன்பிறகு கடந்த ஜூலை 25-ந் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் 17 வயது சிறுவன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டான். பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இந்நிலையில், சமீபகாலமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் வருத்தம் அளிப்பதாகவும், கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள் கல்வியை வணிகமாக கருதாமல் ஒரு சேவையாக கருதி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் “மாணவர்கள் கல்லூரிகளில் பட்டம் பெறுவதற்காக மட்டும் இல்லை. நீங்கள் (கல்வியாளர்கள்) அவர்களுக்கு தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் உறுதியைக் கொடுக்க வேண்டும். மாணவர்கள், குறிப்பாக, பெண்கள் பிரச்சனைகள், அவமானங்கள் மற்றும் பிற தடைகளை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் பெண்கள்) அறிவாற்றல் கூர்மையாக இருக்க வேண்டும்,
ஆனால் அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வலிமையானவர்களாக வளர வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று பிடிஐ வெளியிட்டுள்ள செய்தியை முதல்வர் ஸ்டாலின் மேற்கோள் காட்டியுள்ளார். மேலும் மாணவிகள் உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ தொந்தரவு செய்தால், அரசு அமைதியாக இருக்காது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-four-student-suicide-on-july-month-education-not-business-stalin-says-485237/