வெள்ளி, 29 ஜூலை, 2022

கோவிட் தொற்றிலிருந்து மீண்ட பிறகும் அறிகுறிகள் உள்ளதா? ஆய்வு கூறுவது என்ன?

 

28 7 2022 

கோவிட் தொற்றிலிருந்து மீண்ட பிறகும் அறிகுறிகள் உள்ளதா? ஆய்வு கூறுவது என்ன?

உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய நோய் உலகம் முழுவதும் பரவி மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. உயிரிழப்புகள் அதிகரித்தன.

நோய் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. மக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளுக்கும் அறிவுறுத்தியது. இந்தியாவில் இதுவரை 4 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சம் பேர் நோய் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

காய்ச்சல், வாசனை இழப்பு, மூச்சு விடுதலில் சிரமம் ஆகியவை கொரோனா அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் சுமார் 2 மில்லியன் மக்கள் கோவிட் நோய்த்தொற்றுக்குப் பிறகு தொடர்ச்சியான அறிகுறிகளைக் கொண்டுள்ளனர் என ஆய்வு கூறுகிறது. இது நீண்டகால கோவிட் என்று அழைக்கப்படுகிறது.

முடி உதிர்தல், சோர்வு, மூச்சுத் திணறல் போன்றவை நீண்டகால கோவிட்கான அறிகுறிகளாக ஆய்வு கூறுகிறது. நேச்சர் மெடிசின் என்ற இதழில் ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 லட்சத்து 50 ஆயிரம் பேரின் தரவுகளையும், கொரோனா பாதிக்கப்படாத 1.9 மில்லியன் மக்களின் தரவுகளையும் வைத்து ஜனவரி 2022 முதல் ஏப்ரல் 2021 வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 12 வாரங்கள் கழித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு 62 வகையான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. வாசனை உணர்வு இழப்பு, மூச்சுத் திணறல், சோர்வு போன்ற சில அறிகுறிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனாலும் பல்வேறு அறிகுறிகள் தென்பட்டன. முடி உதிர்தல், லிபிடோ குறைதல், நெஞ்சு வலி, காய்ச்சல், விறைப்புத்தன்மை, மூட்டு வீக்கம் ஆகியவை தென்பட்டன.

மூன்று வகைகள்

அறிகுறிகள் அடிப்படையில் மூன்று வகைகளாக நீண்டகால கோவிட் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. அதில் 80% பேர் அடங்கிய பெரிய குழு சோர்வு, தலைவலி, உடல்வலி அறிகுறிகள் கொண்டிருந்தனர். இரண்டாவது பெரிய குழு 15% பேர் மன ஆரோக்கியம், மனச்சோர்வு, பதற்றம், தூக்கமின்மை உள்ளிட்ட அறிகுறிகளை கொண்டிருந்தனர். மூன்றாவது மற்றும் சிறிய குழு, 5% பேர் மூச்சுத் திணறல், இருமல், சுவாச பிரச்சனை அறிகுறிகளை கொண்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சை

நீண்டகால கோவிட் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவமனையில் வைத்து சிசிக்சை அளிக்கப்படுகிறது. இருப்பினும் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு நீண்டகால கோவிட் நோயின் அறிகுறிகளை மேலும் கண்டறிய விரிவான கருவிகள் தேவைப்படுகிறது. உலகெங்கும் நீண்டகால கோவிட் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தனிப்பட்ட கவனிப்பு அவசியம் என ஆய்வு தெரிவிக்கிறது.


source https://tamil.indianexpress.com/science/hair-loss-low-sex-drive-erectile-dysfunction-among-symptoms-of-long-covid-study-485742/