ஞாயிறு, 24 ஜூலை, 2022

இலங்கை மக்களுக்கு தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கப்படும்- தமிழ்நாடு அரசு

 

இலங்கையில் நிலவி வரும் சூழலை, தொடர்ந்து கண்காணித்து அங்குள்ள மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் கிடைத்திட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியால், உணவுப் பொருள் தட்டுப்பாட்டில் சிக்கித்தவித்து இன்னலுறும் இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தமிழக மக்களின் சார்பில் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதை கருத்தில் கொண்டு 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்ததை சுட்டிக்காட்டியுள்ள தமிழ்நாடு அரசு,  இப்பணிக்காக ரூபாய் 177 கோடியை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்திரவிட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் அடிப்படையில் இப்பொருட்களை கொள்முதல் செய்வதற்கான பணி உடனடியாக தொடங்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என அரசு தெரிவித்துள்ளது. இலங்கை மக்கள் பயன்படுத்த கூடிய அரிசி வகைகளும் கண்டறியப்பட்டு, தமிழ்நாட்டிலுள்ள 85 அரிசி ஆலைகளிடமிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டது. மேலும் பால் பவுடர், ஆவின் நிறுவனத்திடம் இருந்தும், மருந்துப் பொருட்கள், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலமாகவும் கொள்முதல் செய்யப்பட்டன என தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இப்பணிகள் அனைத்தும், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையால் ஒருங்கிணைக்கப்பட்டு, 9075 மெட்ரிக் டன் பொருட்கள் அடங்கிய முதல் தொகுப்பை 18.05.2022 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை துறைமுகத்தில் இருந்து, இலங்கைக்கு TAN BINH 99 என்ற கப்பலில் அனுப்பி வைத்தது செய்தி குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து 22.06.2022 அன்று 15,000 மெட்ரிக் டன் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய இரண்டாவது கப்பலை (VTC SUN),  தமிழக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு அனுப்பி வைத்தார்கள் என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, அடுத்த கட்டமாக இன்று (23.07.2022) 16,595 மெட்ரிக் டன் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய மூன்றாவது கப்பலை (VTC SUN) தூத்துக்குடி நாடாளுமன்ற கனிமொழி மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் இலங்கைக்கு அனுப்பி வைத்ததாக கூறியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தவாறு 40,000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் 102 மெட்ரிக் டன் உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் இலங்கை மக்களுக்கு இவ்வாறு மூன்று  கப்பல்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக  தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  இதற்காக கப்பல் போக்குவரத்து செலவு உட்பட 196.83 கோடி ரூபாயை தமிழக அரசு செலவிட்டுள்ளது என்றும் இத்தொகையில் 8.22 கோடி ரூபாய், தமிழ்நாடு  முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்த பங்களிப்புகள் மூலமாகவும் எஞ்சியுள்ள 188.61 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசின் சொந்த நிதியில் இருந்தும் செலவிடப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அனைவரும் பாராட்டியுள்ள இந்த நடவடிக்கையால் இலங்கையில் பொது மக்களுக்கு ஆறுதல் கிடைத்துள்ளது என்று கூறியுள்ள தமிழ்நாடு அரசு,  இலங்கையில் நிலவி வரும் சூழலை, தொடர்ந்து கண்காணித்து அந்த மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் கிடைத்திட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என தனது செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.

source https://news7tamil.live/tn-govt-statement-sri-lanka-reliefelief.html