செவ்வாய், 26 ஜூலை, 2022

கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து திருவள்ளூர் பள்ளி மாணவி தற்கொலை!

 

கள்ளக்குறிச்சி மாணவி மர்மான முறையில் மரணமடைந்து, அந்த நிகழ்வின் அதிர்ச்சி நீங்கும் முன்பே, சென்னையை அடுத்த திருவள்ளூரில் அதேபோல் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொணடுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசானம். இவரது மனைவி முருகம்மாள். இவர்களது  மகள் சரளா. சரளா திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த கீழச்சேரி பகுதியில் உள்ள சாக்ரெட் ஹார்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை அறைத் தோழிகள் உணவு எடுக்கச் சென்றபோது , அவர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. சம்பவம் அறிந்த காவல்துறையினர் அவரது உடலை திருவள்ளூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக திருவள்ளூர் எஸ்பி பெகர்லா செபாஸ் கல்யாண், திருவள்ளூர் வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார், மற்றும் குழந்தைகள் நல அதிகாரி ஆகியோர் பள்ளி விடுதிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் இன்னும் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. தங்கள் மகள் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.  


source https://tamil.indianexpress.com/tamilnadu/thiruvallur-shool-girl-suicide-484202/