புதன், 27 ஜூலை, 2022

ஆர்டர்லி’ புகார்: நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு!

 தமிழகத்தில் பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாகப் பணியாற்றும் போலீஸாரை உடனே திரும்ப பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே இதுதொடப்பான வழக்கில் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று (ஜூலை 25) மீண்டும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் குமரேசன் ஆஜராகி, “தமிழகத்தில் காவல்துறையில் உள்ள ஆர்டர்லி முறையை ஒழிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. ஏற்கெனவே இதுதொடர்பாக தக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.

இதையடுத்து நீதிபதி கூறுகையில், “பணியைத் தொடங்கினால் மட்டும் போதாது. அனைத்து ஆர்டர்லிகளையும் ஒரே உத்தரவில் திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அகில இந்திய பணிகள் விதிகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1979ஆம் ஆண்டிலேயே ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பல மாநிலங்களில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் ஆர்டர்லி முறை தொடர்கிறது. இது உயர் அதிகாரிகளின் ஆங்கிலேய காலனி மனநிலையைத்தான் எதிரொலிக்கிறது. ஆர்டர்லி முறை உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும்.

காவல்துறை அதிகாரிகள் தங்களது வீடுகளில் ஆர்டர்லியாக வைத்து பணியாற்றும் காவலர்கள் தாமாக முன்வந்து விடுவிக்க வேண்டும்.

ஆர்டர்லி தொடர்பாக புகார் அல்லது தகவல் தெரிவிக்கப்பட்டால், உள்துறை செயலர், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஆக்ஸ்ட் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/higher-police-officials-using-personnel-as-orderlies-a-clear-misconduct-madras-hc-484539/