வெள்ளி, 22 ஜூலை, 2022

பெரும்பாலான சி.சி டி.வி காட்சிகளை மறைப்பது ஏன்? வேல்முருகன் கேள்வி

 Kallakurichi student death case; velmurugan mla ask question

T. Velmurugan Member of the Tamil Nadu Legislative Assembly

க. சண்முகவடிவேல்

Kallakurichi student death case; T. Velmurugan MLA Tamil News: திருச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 100-க்கும் மேற்பட்டவர்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளும் இணைப்பு விழா திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ராயல் ராஜா தலைமை தாங்கினார். திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பிலவேந்திரன் புறநகர் மாவட்ட செயலாளர் ராவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கள்ளக்குறிச்சி சின்னசேலத்தில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்ததற்கு நீதி கேட்டு அந்த மாணவியின் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் அறவழியில் போராட்டம் நடத்தி வந்தனர்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் மெத்தனப் போக்கினால் போராட்டம் வன்முறையாக மாறிவிட்டது. வன்முறை நடந்த பின்னர் தான் அங்கு மாவட்ட ஆட்சியர், கல்வி அதிகாரி, போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் சென்றிருக்கிறார்கள். போராட்டம் நடந்த போது அவர்களின் நியாயமான கோரிக்கையை செவிமடுத்து கேட்டு மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த வன்முறை நடந்திருக்காது.

ஸ்ரீமதி உண்மையில் தற்கொலை செய்தாரா? அல்லது பள்ளி நிர்வாகத்தின் தூண்டுதலில் தற்கொலைக்கு தள்ளப்பட்டாரா? மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தார் என்றால் அந்த சிசிடிவி பதிவினை ஏன் வெளியிடவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அந்தப் பள்ளியில் கழிவறை தவிர, அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். அவர் மாடியில் நடந்து வந்த காட்சி பதிவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி என்றால் குதித்த காட்சி மட்டும் ஏன் பதிவாகவில்லை.

தற்போது காவல்துறையினர் சகட்டுமேனிக்கு எந்த வன்முறையிலும் ஈடுபடாமல் அந்த மாணவியின் இறப்புக்கு குரல் கொடுத்தவர்களை கைது செய்து 17 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருப்பது ஏற்புடையது அல்ல. வன்முறையில் ஈடுபட்டவர்களை, பொருட்களை சூறையாடி தூக்கி சென்றவர்களை இனம் கண்டு கைது செய்யுங்கள். மாணவியின் இறப்பில் மர்மம் சந்தேகங்கள் நிறைய இருக்கிறது.

இந்த நிலையில் நீதி கேட்டு போராடியவர்களை கைது செய்வது தமிழ் சமூகத்துக்கும் ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல. தமிழகத்தில் பல பள்ளிகள் முதன்மை கல்வி அலுவலரே நுழைய முடியாத அளவுக்கு அதிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களாக இருக்கின்றன. இது போன்ற கல்வி நிறுவனங்களை மாநில அரசு கையகப்படுத்த வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வந்தால் தான் இது சாத்தியமாகும்.

மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு 24 மணி நேரத்துக்கு மேலாகியும் ஏன் அது தொடர்பான விவரங்களை வெளியிடவில்லை. வன்முறை சம்பவத்தை கண்டித்து தனியார் பள்ளி கூட்டமைப்பு நடத்திய போராட்டம் காரணமாக தமிழகத்தில் 987 பள்ளிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இந்த அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளில் எந்த ஒரு மாணவியோ பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டோ, தூண்டப்பட்டு கட்டாயப்படுத்தப்பட்டு தங்கள் உயிரை மாயித்துக்கொள்ள கூடாது. அப்படி ஒரு சம்பவம் இனி தமிழ்நாட்டில் எங்கேயாவது நடந்தால் உடனடியாக தமிழக அரசு தலையிட்டு உண்மை தன்மையை அறிந்து அந்த தனியார் பள்ளியை அரசுடைமை ஆக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு ஒரு கோடி நஷ்ட ஈடும் தாய், தந்தை யாரேனும் ஒருவருக்கு அரசு வேலையை தமிழக அரசு வழங்க வேண்டும் எனக் கூறினார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/kallakurichi-student-death-case-velmurugan-mla-ask-question-482557/