வியாழன், 28 ஜூலை, 2022

முன்னாள் டிஜிபி ஜாஃபர் சேட் வழக்கு: அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை விசாரணை

 

தமிழக உளவுத்துறை ஐஜியாக இருந்த முன்னாள் டிஜிபி ஜாஃபர் சேட்டிற்கு தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரியம் நிலம் ஒதுக்கியது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜரானார். அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

தமிழ்நாடு காவல் துறையில் 2006 – 2022 காலகட்டத்தில், முன்னாள் டிஜிபியும் தமிழக உளவுத்துறை ஐஜியாக இருந்தவர் ஜாஃபர் சேட். பெசண்ட் நகர் கோட்டம் திருவான்மியூர் புறநகர் பகுதியில், இவரது மகள் மற்றும் மனைவி பெயரில், நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அந்த இடத்தில் ஒரு வணிக வளாக கட்டிடம் கட்டி இயக்கி வந்ததும், ஜாஃபர் சேட்டின் மனைவி சமூக சேவகர் என்ற பெயரில் வெளிநாட்டு பணங்களை பரிவரத்தனை செய்ததாக புகார் எழுந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஜாஃபர் சேட்டின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஜாஃபர் சேட், தான் ஐபிஎஸ் அதிகாரி என்றும் மத்திய அரசின் அனுமதி இன்றி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். ஜாஃபர் சேட் ஐபிஎஸ் அதிகாரி என்பதால், இவர் மீதான குற்றப்பத்திரிகையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த வழக்கை 2020 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் கையில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். ஜாஃபர் சேட் மகள் மற்றும் மனைவி பெயருக்கு சட்டத்திற்கு புறம்பாக தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி வாரியம் நிலம் ஒதுக்கியது என்றும், அங்கே வணிக வளாகம் கட்டியது மற்றும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், ஜாஃபர் சேட்டுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டபோது, அப்போது விட்டுவசதி வாரியத் துறை அமைச்சராக இருந்தவர் திண்டுக்கல் ஐ. பெரியசாமி தற்போது கூட்டுறவுத் துறை அமைச்சராக இருக்கிறார். இந்த வழக்கில் இவருக்கும் ஏதேனும் தொடர்பு இருப்பதாகவும் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அண்மையில் சம்மன் அனுப்பியது.

இதைத் தொடர்ந்து, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.

source https://tamil.indianexpress.com/lifestyle/new-drugs-for-diabetes-good-for-all-or-for-a-few-485573/