சனி, 30 ஜூலை, 2022

சென்னை கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் ரெடி: தீபாவளி முதல் பஸ்கள் இயக்கத் திட்டம்

 

கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம்

Chennai Tamil News: தமிழ்நாட்டில் உள்ள மற்ற ஊர்களில் இருந்து சென்னைக்கு வருவதற்கு புதிய பேருந்து நிலையம் கிளம்பாக்கத்தில் தயாராகிவிட்டது. அதனால், வெளியூர் பேருந்து சேவைகள் அனைத்தையும் சென்னை கோயம்பேட்டில் இருந்து கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றும் பணி தீவிரமடைந்துள்ளது. 

பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்தபின்பு, வரும் தீபாவளி பண்டிகைக்கு முன், கிளம்பாக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என சி.எம்.டி.ஏ., மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டு மக்கள் சென்னைக்கு வர நினைத்தாலோ அல்லது மற்ற புறநகர் பகுதிகளுக்கு செல்லவேண்டும் என்று நினைத்தாலோ அவர்களுக்கு தென்படும் ஒரே இடமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்தது. இதனாலேயே சென்னை கோயம்பேடில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு அளவில்லாமல் போனது. 

இதற்கு தீர்வாக, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம், 400 கோடி ரூபாயில் கட்டப்படுகிறது. இங்கு, 40 ஏக்கர் பரப்பளவில் கட்டுமான பணிகள் நடத்தப்பட்டது. 

2019ல் துவங்கிய இந்த கட்டுமானம், இந்த ஆண்டு விரைவில் நிறைவுக்கு வருகிறது என மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்த பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக, இந்த பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இதனால் மக்களின் போக்குவரத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், அனைத்து அரசு போக்குவரத்து கழகங்கள், மாநகர போக்குவரத்து கழகம், ஆம்னி பேருந்துகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.

புதிய பேருந்து நிலையத்துக்கான அடிப்படை கட்டுமான பணிகள் முடிந்துள்ள நிலையில், பயன்பாட்டு வசதிகள், பூச்சு வேலை, மின்சார இணைப்பு போன்ற பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த பணிகள் அடுத்த ஓரிரு மாதங்களில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோயம்பேட்டில் செயல்படும் வெளியூர் பேருந்து சேவைகளை, கிளாம்பாக்கத்துக்கு மாற்றுவதற்கான வழிமுறைகளை நடத்தப்படும் வேளையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எனப்படும் சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், மாநகர போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து மேம்பாட்டு குழுமமான ‘கும்டா’ அதிகாரிகள் பங்கேற்றனர். பேருந்து சேவைகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்றுவதற்கான வழிமுறைகளை வகுக்க நியமிக்கப்பட்டுள்ள தனியார் கலந்தாலோசகர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

புதிய பேருந்து நிலையத்தில், வெளியூர் செல்லும் அரசு பேருந்துகளை நிறுத்துவதற்கு தேவையான வசதிகள், மாநகர பேருந்துகள் நிறுத்தும் இட வசதிகள், மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்கான இட வசதிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சென்னையில் இருந்து வெளியூர் செல்வோர், வெளியூரில் இருந்து சென்னைக்கு வருவோர், பிற போக்குவரத்து சேவைகளை என எல்லாவற்றையும் எளிதில் அணுகுவதற்கான வழிமுறைகள் குறித்தும், கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், வரும் தீபாவளியின் போது வெளியூர் செல்வோர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயன்படுத்தலாம்  என சி.எம்.டி.ஏ., நம்பிக்கை அளித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-new-bus-terminus-at-kilambakkam-486324/