திங்கள், 25 ஜூலை, 2022

Chess Olympiad 2022: மாமல்லபுரத்தில் இதெல்லாம் மிஸ் பண்ணிராதீங்க!

 must-visit places in Mamallapuram

மாமல்லபுரம் கடற்கரை கோவில்

2022ஆம் ஆண்டிற்கான சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்ன மகாபலிபுரத்தில் உள்ள பூஞ்சேரி என்ற கிராமத்தில் தொடங்க உள்ளது. யூனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு, பாரம்பரிய சுற்றுலாதலமாக விளங்கும் இந்த மாமல்லபுரம் சென்னையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இங்கு வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு இடங்கள் அமைந்துள்ளன. இந்த இடம் பல்லவ மன்னர்கள் காலத்தில் துறைமுக பகுதியாக காணப்பட்டது. இங்கு முதலாம் மற்றும் இரண்டாம் நரசிம்ம வர்மன் காலத்தில் பல்வேறு கோயில்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் கட்டி முடிக்கப்பட்டன.

ஆகவே நீங்கள் மாமல்லபுரம் செல்லும்போது இதையெல்லாம் பார்க்காம மிஸ் பண்ணிராதீங்க.

கடற்கரை கோவில்

இந்தக் கடற்கரை கோவில் இதன் கட்டடக் கலைக்காக நன்கு அறியப்பட்ட ஒரு கோவிலாகும். இந்தக் கோவில் மீது சந்திரனின் ஒளி படர்கையில் கொள்ளை அழகாக காட்சியளிக்கும்.
தென் இந்தியப் பாணியில் கட்டப்பட்ட இந்தக் கோவில் வளாகத்தில் ஒரு பெரிய மற்றும் இரண்டு சிறிய ரக கோவில்கள் உள்ளன. இந்தப் பழமையான கட்டடம் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டதாகும். இது உலக பாரம்பரிய சின்னத்தில் ஒன்றாக உள்ளது.

வெண்ணெய் உருண்டை

சென்னை செஸ் ஒலிம்பியாட்
கிருஷ்ணா வெண்ணெய் உருண்டை


இந்த வெண்ணெய் உருண்டை என அழைக்கப்படும் இந்தப் பாறை கிருஷ்ணாவின் வெண்ணெய் உருண்டை எனவும் அழைக்கப்படுகிறது. எத்தனையோ அரசர்கள் மற்றும் யானைகள் முயற்சித்தும் இந்தப் பாறையை நகர செய்ய முடியவில்லை என நம்பப்படுகிறது.
இந்தப் பாறை அருகே சென்று நகர்த்த முயன்று முடியாமல் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் இளைஞர்கள் முதல் இளைஞிக்ள் வரை என அத்தனை தரப்பு மக்களையும் இன்றளவும் காணலாம்.

குகைக் கோவில்கள்
மகாபலிபுரத்தில் 9 குகைக் கோவில்கள் உள்ளன. இந்தக் குகைக் கோவில்கள் இந்து தர்மத்தை சித்தரிக்கின்றன. விஷணுவின் வராக (பன்றி) அவதார சிற்பங்கள் காணப்பட்டன.
இது இவ்வகை சிற்பங்களுக்கு தாயகமாக பார்க்கப்படுகிறது. பாறையை குடைந்து இந்தச் சிற்பங்கள் 7ஆம் நூற்றாண்டில் வடிக்கப்பட்டுள்ளன. உள்ளே மகிஷாசுரமர்த்தினி சிற்பங்களும் காணப்படுகின்றன.

மகாபலிபுரம் கலங்கரை விளக்கம்
மகாபலிபுரத்தில் உள்ள கலங்கரை விளக்கம் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடங்களில் ஒன்றாகும். இது ஒரு அழகிய உயரமான அமைப்பாகும்.

இந்தக் கலங்கரை விளக்கின் நுனியை காண நீங்கள் பெரிய படிக்கட்டுகளை ஏற வேண்டியிருக்கும். இது உங்களுக்கு உற்சாகமான புதிய அனுபவத்தை கொடுக்கும். மேலும் கலங்கரை விளக்கத்தில் இருந்து பார்க்கும்போது இயற்கை எழில் சூழ்ந்த புதிய இடங்களை பார்க்கலாம்.

தக்ஷிண சித்ரா அருங்காட்சியகம்
மாமல்லபுரம் செல்லும் சாலையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் தென் இந்திய மக்களின் பல்வேறு வாழ்க்கை முறைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு நிறைய வரலாற்று வீடுகள் காணப்படுகின்றன. மேலும் இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு கலை பொருள்கள் விற்கப்படுகின்றன. நீங்கள் இங்கு செல்கையில் ஒரு அற்புதமான நிகழ்வாக அது அமையும். இங்கு வருகிற ஆகஸ்ட மாதம் 6ஆம் தேதி முதல் குழந்தைகள் இலக்கிய விழாவும் நடைபெறவுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இலவசமாக சுற்றுலாப் பேருந்துகளை மாமல்லபுரத்தில் இருந்து இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/chess-olympiad-2022-must-visit-places-in-mamallapuram-483978/