நாட்டில் மொத்தம் 612 மருத்துவக் கல்லூரிகளும், அதில் 322 அரசு மற்றும் 290 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 2022-23 சேர்க்கைக்கு கிட்டத்தட்ட 92,000 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.
இவற்றில் 48,000 க்கும் அதிகமானவை அரசுக் கல்லூரிகளிலும், கிட்டத்தட்ட 44,000 தனியார் கல்லூரிகளிலும் உள்ளன என்று டாக்டர் ஹீனா காவிட் (பாஜக) மற்றும் டாக்டர் ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) எழுப்பிய கேள்விக்கு, சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வெள்ளிக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியுதவி திட்டத்தின் கீழ், 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏற்கனவே உள்ள அரசு கல்லூரிகளுக்கு 3,495 கூடுதல் எம்பிபிஎஸ் இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இவை ஆந்திரப் பிரதேசம் (150 இடங்கள்), குஜராத் (270), இமாச்சலப் பிரதேசம் (20), ஜம்மு & காஷ்மீர் (60), ஜார்கண்ட் (100), கர்நாடகா (550), மத்தியப் பிரதேசம் (600), மகாராஷ்டிரா (150), மணிப்பூர் (50), ஒடிசா (200), பஞ்சாப் (100), ராஜஸ்தான் (700), தமிழ்நாடு (345), உத்தரப் பிரதேசம் (50), உத்தரகாண்ட் (50), மற்றும் மேற்கு வங்கம் (100) ஆகும்.
கூடுதலாக, 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிய முதுகலை பிரிவுகளுக்கான 5,930 இடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த இடங்கள் இரண்டு கட்டங்களாக அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள்
தற்போது, தமிழகத்தின் 38 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிகமாக 5,225 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. தொடர்ந்து, மகாராஷ்டிராவில் 29 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 4,825 இடங்களும், உத்தரப் பிரதேசத்தில் 35 கல்லூரிகளில் 4,303 இடங்களும், குஜராத்தில் 18 கல்லூரிகளில் 3,700 இடங்களும், மேற்கு வங்கத்தில் 20 கல்லூரிகளில் 3,225 இடங்களும் உள்ளன.
இதில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத ஒரே மாநிலம் சிக்கிம் மட்டுமே, இங்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் மட்டும் 150 MBBS இடங்கள் உள்ளன.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக எம்பிபிஎஸ் இடங்களைக் கொண்ட மாநிலமாக கர்நாடகா உள்ளது, அங்கு 42 கல்லூரிகளில் 6,995 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.
அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 32 தனியார் மருத்துவ கல்லூரிகளில், 5,500 இடங்களும், மகாராஷ்டிரா (33 இல் 5,070), உத்தரப் பிரதேசம் (32 இல் 4,750) மற்றும் தெலுங்கானாவும் (23 இல் 3,200) உள்ளன.
source https://tamil.indianexpress.com/explained/explained-92-thousand-mbbs-seats-in-medical-colleges-in-all-over-india-483333/