19 07 2022 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இரண்டாவது நாளான இன்று காலை 11 மணிக்கு வழக்கம்போல் நாடாளுமன்றம் கூடியது.
மக்களவை கூடியதும், அவையில் பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உயர்வு, அக்னிவீர் திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லாவை வலியுறுத்தினார்.
இதை ஏற்க மறுத்த ஓம் பிர்லா, திட்டமிட்டபடி கேள்வி நேரம் தொடங்குவதாக அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை மீண்டும் கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடபட்டனர்.
அமைதி காக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லா பல முறை கூறியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்காததால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் முதலில் 2 மணி வரையிலும் பின்னர் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
அவையில் இருந்து வெளியே வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், 2014 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, இந்திய ரூபாயின் மதிப்பு மன்மோகன் சிங் அரசைப் போலவே வலிமையற்று இருப்பதாகவும், தான் ஆட்சிக்கு வந்தால் ரூபாயின் மதிப்பு வலுவடையும் என்றும் கூறியதாகக் குறிப்பிட்டார்.
ஆனால், மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 50 ஆக இருந்ததாகவும், அது தற்போது 80 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்து, இதற்கு மத்திய அரசு பதில் கூற வேண்டும் என வலியுறுத்தினார்.
source https://news7tamil.live/both-houses-of-parliament-adjourned-for-the-day.html