44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலம் உலக அரங்கில் தமிழ்நாட்டின் மதிப்பு மேலும் உயரும் என்று பெருமிதம் தெரிவித்தார்.
44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், செஸ் ஒலிம்பியாட் ஜோதியை மேடைக்கு கொண்டு வந்து முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தார். அதை அவர் பிரதமர் மோடியிடம் கொடுத்தார். பின்னர் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பெற்றுச் சென்று செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றினார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் வழக்கமாக அரசு நிகழ்ச்சிகளில் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து பங்கேற்பார். ஆனால், செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் மு.க. ஸ்டாலின் பட்டு சட்டை, பட்டு வேட்டி அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
செஸ் ஒலிம்பியாட் விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “இந்த நாள் இந்தியாவுக்கு மிகப்பெரிய பெருமைமிக்க நாள். நேரு விளையாட்டு அரங்கத்துக்கு பன்னாட்டு அங்கீகாரம் கிடைக்கும் அளவில் இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. பிரதமர் செஸ் மீது ஆர்வம் கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது 20,000 பேர் கலந்துகொண்ட மிகப் பெரிய போட்டி நடத்தினார்.
இந்த விழாவிற்காக அழைப்பிதழ் உடன் டெல்லி சென்று பிரதமரை நேரில் அழைக்கலாம் என்று திட்டமிட்டிருந்தேன். கொரோனா காரணமாக நேரில் சென்று அழைக்க முடியவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தபோது, பிரதமர் தொலைபேசியில் நலம் விசாரித்தார். அப்போது என்னுடைய நிலையை விளக்கிக் கூறினேன். அவர் அப்போது பெருந்தன்மையுடன் நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள், நான் நிகழ்ச்சியில் வந்து பங்கேற்கிறேன் என்று கூறினார்.
இந்த விழா இந்தியாவுக்கு பெருமை தரக்கூடிய விழா என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்கள். அதற்கு ஏற்ப இந்த நிகழ்ச்சியில் பங்கேறு சிறப்பித்திருக்கிறார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷ்யாவில் நடப்பதாகச் சொல்லப்பட்டது. கரோனா மற்றும் சில பிரச்சினைகள் காரணமாக ரஷ்யாவில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. வேறு எந்த நாட்டில் நடத்தலாம் என ஆலோசனைகள் நடைபெற்றதை அறிந்து இந்தியாவில் நடைபெறும் வாய்ப்பு வருமானால் தமிழ்நாட்டில் நடத்தும் வாய்ப்பை நாம் பெற்றிட வேண்டும் என அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டேன்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கடந்த மார்ச் 16-ம் தேதி இதற்கான முறையான அறிவிப்பை நான் வெளியிட்டேன். இந்த விளையாட்டுப் போட்டியை சிறப்பாக நடத்தும் விதமாக 18 துணைக் குழுக்களை அமைத்தேன். இது போன்ற பன்னாட்டு விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கு 18 மாதம் ஆகும் என்பார்கள். ஆனால் நான்கே மாதத்தில் நாங்கள் நடத்திக் காட்டியிருக்கிறோம்.
உலக அளவில் தமிழ்நாட்டின் மீது கவனம் ஈர்க்கும் நிகழ்வாகத் துவங்கியுள்ளது. செஸ் ஒலிம்பியாட் மூலம் விளையாட்டுத்துறையும், சுற்றுலாத்துறையும், தொழில் துறையும் வளர்ச்சி அடைய உள்ளது. தமிழ்நாட்டின் மதிப்பும், தமிழக அரசின் மதிப்பும் மேலும் மேலும் உயரும். இந்த உயர்வு என்பது மிக சாதாரணமாகக் கிடைத்துவிடுவதல்ல. போர் மரபிற்கும், தமிழர்களுக்கும் தொடர்பிருப்பதை கீழடி நமக்குச் சொல்கிறது. அனைக்குப்பு என்று சதுரங்க விளையாட்டிற்குத் தமிழில் பெயர் இருந்திருக்கிறது. ஆனைக்குப்பு ஆடுபவரைப் போலவே என நாலாயிரதிவ்யபிரபந்தம் சொல்கிறது. ஒரு காலத்தில் இது அரசர்கள் விளையாட்டு என்று சொல்லப்பட்டது. தற்போது மக்கள் அனைவரும் விளையாடும் விளையாட்டாகச் சதுரங்கம் இருக்கிறது
செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்திய துணைக் கண்டத்தில் முதல் முறைமுகமாகவும் ஆசியாவில் 3வது முறையும் நடந்துள்ளது. ஆசியாவில் விளையாடப்பட்ட சதுரங்கம்தான் உலகம் முழுவதும் சிறு சிறு மாறுதல்களுடன் நடந்து வருகிறது.
சென்னை பட்டினத்தில் சதுரங்க பட்டினத்தை சத்ரா ஸ் என்று அழைத்தார்கள். அத்தகைய சதுரங்கப் பட்டினத்துக்கு அருகில்தான், மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது நமக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை.
கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே இந்தியத் துணைக்கண்டத்தில் விளையாடப்பட்டு வந்த சதுரங்க விளையாட்டுதான், இன்று உலகம் முழுக்கவும் செஸ் என்ற பெயரால் பரவி இருக்கிறது. சில சில மாறுதல்களுடன் உலகின் பல்வேறு நாடுகளில் சதுரங்கம் விளையாடப்பட்டு வருகிறது.
தொடக்கவிழா இங்கு நடைபெற்றாலும், போட்டிகள் முழுமையாக, இயற்கை எழில் கொஞ்சும் மாமல்லபுரத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு அரசு செய்திருக்கிறது.
மாமல்லபுரம் இந்தியக் கட்டடக்கலையின் அருங்காட்சியகம். அதற்குப் பக்கத்தில்தான் சதுரங்கப்பட்டினம் என்ற கடலோரப் பகுதி இருக்கிறது. சென்னைப் பட்டனத்தை மெட்ராஸ் என்று அழைத்ததைப் போல சதுரங்கப்பட்டனத்தை சத்ராஸ் என்று அழைத்தார்கள். மன்னர் காலத்தில் இருந்து புகழ்பெற்ற ஊர் அந்த ஊர். இன்றைக்கு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் அந்த ஊர் கோட்டை இருக்கிறது. அத்தகைய சதுரங்கப்பட்டனத்துக்கு அருகில்தான் உலகப்புகழ் பெற்ற சதுரங்கப் போட்டி நடக்க இருக்கிறது.
1961-ஆம் ஆண்டு உலக செஸ் சாம்பியனாகப் புகழ் பெற்ற மானுவல் ஆரோன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது நமக்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பெருமை ஆகும். இந்தியாவில் செஸ் விளையாட்டை முன்னோக்கி நகர்த்தி, பல்வேறு திறமையாளர்களுக்கு ஊக்கமளித்ததும் மானுவல் ஆரோன்தான்.
1972-ஆம் ஆண்டே சென்னையில் இருந்த சோவியத் கலாச்சார மையத்தில் செஸ் க்ளப் ஒன்றினை உருவாக்கியவர் ஆரோன். செஸ் விளையாட்டில் உலகப்புகழ் பெற்ற வீரர்களை உருவாக்கிய சோவியத் நாடே, ஆரோனின் ஆலோசனையை பெற்றுத்தான் செயல்பட்டது. தமிழ்நாடு செஸ் அசோசியேஷனை உருவாக்கியவரும் இவர்தான்.
உலகக் கிராண்ட் மாஸ்டராகப் புகழ் பெற்ற விஸ்வநாதன் ஆனந்த் அவர்களைப் பற்றி உங்களுக்கு நான் அதிகம் சொல்லத் தேவையில்லை.
1988-ஆம் ஆண்டு தனது 19வது வயதில் உலகப் புகழைப் பெற்றவர் ஆனந்த் அவர்கள். இன்று வரை உலக சதுரங்க ஆட்டத்தில் வலிமையான வீரராக அவர் விளங்கிக் கொண்டு இருக்கிறார்.
2001-ஆம் ஆண்டு பெண் கிராண்ட் மாஸ்டராக பட்டம் வென்றவர் விஜயலட்சுமி சுப்பராமன்.
2018-ஆம் ஆண்டு மிக இளம் வயதில் கிராண்ட் மாஸ்டராக உயர்ந்தார் பிரக்ஞானந்தா.
இந்தியாவில் உள்ள 73 செஸ் கிராண்ட் மாஸ்டர்களில் 26 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இது 36 சதவீதம் ஆகும். இந்த விளையாட்டு நுண்ணறிவு உத்தியை அடிப்படையாகக் கொண்டாது. இந்த விளையாட்டில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதற்கக நான் பெருமைகொள்கிறேன். சென்னை இந்தியாவின் செஸ் தலைநகரமாக அழைக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி நடத்துவதற்காக 102 கோடி ரூபாய் ஒதுக்கியது. மேலும், இந்திய விளையாட்டு வீரர்களுக்கு செலவிடுவதற்காக மகிழ்ச்சி அடைகிறோம்.
பள்ளி மாணவர்களுக்கு செஸ் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு கோடி ரூபாய் நிதியை பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கீடு செய்திருக்கிறது.
அதற்கான சிறப்புமிகுந்த விளம்பரப் பாடலை தமிழ்நாட்டில் பிறந்து, உலகளாவிய இசை உலகத்தின் புகழை தனது இளமைக் காலத்திலேயே பெற்ற என்னுடைய அருமைச் சகோதரர் திரு. ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசை அமைத்துக் கொடுத்தார்.
இப்படி செஸ் ஒலிம்பியாட் என்பது விளையாட்டுப் போட்டியாக மட்டுமல்ல, விளையாட்டு விழாவாக மட்டுமல்ல – இந்தியாவில் நடைபெறும் உலகளாவிய பண்பாட்டுத் திருவிழாவைப் போல் ஒரு சகோதரத்துவ மனப்பான்மையுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இத்தகைய விழாவைத் தொடங்கி வைக்க வருகை தந்த மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு நான் நன்றி சொல்கிறேன், என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இது போன்ற வாய்ப்புகளை தொடர்ந்து நீங்கள் தமிழகத்துக்குத் தாருங்கள் என்றும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
ஓர் அரசன்
ஓர் அரசி
இரு அமைச்சர்கள்,
இரு குதிரைகள்,
இரு கோட்டைகள்
எட்டுச் சிப்பாய்கள் என கருப்பு – வெள்ளை ராணுவ மைதானமாகவே காட்சி அளிப்பது சதுரங்கம்.
கீழடியைப் பற்றி நான் அதிகம் விளக்க வேண்டியது இல்லை. பல்லாயிரம் ஆண்டுப் பழமையைக் கொண்ட தமிழினம் வாழ்ந்த அடையாளம் கொண்ட பகுதியாக கீழடி நமக்கு வரலாறு சொல்லிக் கொண்டு இருக்கிறது.
கீழடியில் ஏராளமான பொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அங்கு இரண்டு வகையான ஆட்டக்காய்கள் கிடைத்துள்ளன. தந்தத்தினால் ஆன காய்கள் இவை. இவ்வகையான பொருட்கள், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளை விளையாடப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இவை அனைத்தும் சுடுமண்ணால் சுடப்பட்டு பெரும்பாலும் கருப்பு நிறம் கொண்டவையாக உள்ளன. குழந்தைகள் விளையாட்டில் பயன்படுத்தப்படும் சில்லுகள் கருப்பு சிவப்பு கொண்டவையாக உள்ளன.
போரில் யானையும் உண்டு, குதிரையும் உண்டு.
கோட்டையும் உண்டு வீரர்களும் உண்டு.
அரசனும் உண்டு, அரசியும் உண்டு.
போர் மரபுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு இருப்பதை கீழடி நமக்குச் சொல்கிறது.
‘ஆனைக்குப்பு’ என்று சதுரங்க விளையாட்டுக்கு தமிழ் இலக்கியத்தில் பெயர் இருந்துள்ளது. ‘ஆனைக்குப்பு ஆடுவோரைப் போலவே’ என்று நாலாயிர திவ்ய பிரபந்தம் சொல்கிறது.
அந்தளவுக்குப் பல்லாயிரம் ஆண்டு தொடர்பு, சதுரங்க விளையாட்டுக்கும் தமிழ்நாட்டும் உண்டு. அறிவுக்கூர்மையும் வியூகமும் கொண்ட விளையாட்டு இது. அத்தகைய உலகளாவிய அறிவு விளையாட்டு இன்று தொடங்குகிறது.
அறிவுதான் இறுதிக்காலம் வரைக் காப்பாற்றும் கருவி என்று ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே சொன்ன வள்ளுவர் மண்ணில் உலகத்தின் அறிவுப் போட்டியானது தொடங்குகிறது.
ஒரு காலத்தில், அரசர்களின் விளையாட்டு என்று சொல்லப்பட்டது. இன்று அது மக்கள் அனைவரின் விளையாட்டாக மாறிவிட்டது. மூளை சார்ந்த போர்க்கலையாகச் சொல்லப்படும் விளையாட்டு இது.
அதிர்ஷ்டத்தை நம்பிய விளையாட்டு அல்ல, அறிவை நம்பிய விளையாட்டு!
இந்த விளையாட்டினை தமிழகத்தில், இந்தியாவில், மேலும் பரவச்செய்ய, இந்தப் போட்டிகள் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
இன்றைய மாணவ சமுதாயத்திற்கு கல்வியோடு விளையாட்டையும் கலந்து அளிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக அறிவுத்திறனைப் பெருக்கும் சதுரங்கத்தின் பங்கும் இடம்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு இந்த ஒலிம்பியாட் ஒரு சிறப்பான துவக்கப்புள்ளியாக இருக்கும் என நம்புகிறேன்” என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-says-proudly-tamil-nadu-value-will-increase-by-chess-olympiad-event-486197/