புதன், 20 ஜூலை, 2022

‘தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்

 

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை நடத்தத் தனியாக விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை முகப்போரில் உள்ள தனியார்ப் பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவள்ளுவரின் சிலையைத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பள்ளியில் பன்னிரண்டாம் மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கும், விளையாட்டில் சாதித்த மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக நேரில் சென்று ஆய்வு செய்ததை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காணொளி காட்சி மூலமாக எடுத்துரைத்ததாகவும், அங்குள்ள மக்களின் மனநிலை குறிப்பாக மற்ற மாணவர்களின் மனநிலை என்ன என்பதனை முதலமைச்சரிடம் தெளிவாக எடுத்துரைத்ததாகக் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘அதிமுக அலுவலக சீல் வழக்கு ; நாளை உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்’

தொடர்ந்து பேசிய அவர், 9, 10, 11, 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு கற்றல் இடைவெளி ஏற்படாத வண்ணம் என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதனை முதலமைச்சரிடம் கூறியதாகத் தெரிவித்த அவர், மாணவி மரணம் தொடர்பாக விசாரிப்பதற்குத் தனியாகக் குழு அமைக்கப்படும் என்று ஏற்கனவே முதலமைச்சர் கூறி இருப்பதாகவும், அதன் அடிப்படையில் விசாரணைக்காகக் குழு அமைக்கப்பட்டு சட்டரீதியாக விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

மற்ற மாணவர்களின் கல்வி பாதிக்காத வண்ணம் மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி இருப்பதாகத் தெரிவித்த அவர், இது தொடர்பான வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ள நிலையில் அது குறித்து ஆராயப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை தொடர இருப்பதாகக் கூறினார். மேலும், தனியாகக் குழு அமைத்து விசாரணை தொடர்ந்தாலும், துறையின் சார்பில் மாவட்ட கல்வி அலுவலருடன் தொடர்ந்து இது தொடர்பான அடுத்தடுத்த நிகழ்வுகளைக் கேட்டறிய இருப்பதாகவும், சட்டரீதியான நடவடிக்கை என்பதால் விசாரணைக் குழு மற்றும் துறை சார்ந்து இது தொடர்பாகப் பேசி முடிவெடுக்க இருப்பதாகத் தெரிவித்தார்.

மாணவியின் பெற்றோர்கள் தொடங்கி அனைவரும் எதிர்பார்ப்பது போல் இந்த விஷயத்தில் முறையாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்ட ரீதியான நடவடிக்கை என்பது எடுக்கப்படும் எனக் கூறிய அவர், பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது எனவும், விரைவில் அவை நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்தார்.

 

source https://news7tamil.live/legal-action-will-be-taken-against-whoever-is-at-fault.html