மாநிலங்களவை உறுப்பினர்கள் 19 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத்தினரின் 7-ஆம் நாளான நேற்று மாநிலங்களவையின் அவை நடவடிக்கைக்கு எதிராக நடந்து கொண்டதாகக் கூறி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் உட்பட 19 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிராக நேற்றைய தினம் மாநிலங்களவைக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களால் நேற்றைய தினம் அவை நடவடிக்கை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்றைய தினம் நாடாளுமன்றம் காலை 11 மணிக்குக் கூடிய நிலையில் அதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் மாநிலங்களவை உறுப்பினர்கள் இணைந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதே நேரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் எனவும், எங்களுக்கு நீதி வேண்டும் எனவும் தொடர் கோஷங்களை எழுப்பினர். முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் கொல்லப்படுகிறது என்ற வாசகம் அடங்கிய கருப்பு நிற முகக்கவசம் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
source https://news7tamil.live/suspension-of-19-mps-opposition-protest.html