புதன், 27 ஜூலை, 2022

ஆளுநர் ஒப்புதல் அளித்த 6 மசோதாக்கள் – அரசிதழ் வெளியீடு

 

27 7 2022 ஆளுநரின் ஒப்புதலுக்காக 21 மசோதாக்கள் நிலுவையில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், ஆளுநர் ஒப்புதல் அளித்த 6 மசோதாக்கள் விவரம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக மே மாத நிலவரப்படி 21 மசோதாக்கள் நிலுவையில் இருந்ததாக அறிவிக்கப்பட்டது. 21 மசோதாக்களில் 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக ஜூலை 6 ஆம் தேதி நியூஸ் 7 தமிழ் பிரத்யேக செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில், ஆளுநர் ஒப்புதல் அளித்த 6 சட்டங்கள் குறித்த தகவல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

1. தமிழ்நாடு மதிப்புக் கூட்டப்பட்ட வரி (திருத்தம்) மசோதா, 2022

2. தமிழ்நாடு சம்பளம் வழங்குதல் (திருத்தம்) மசோதா, 2022

3. தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் (நான்காவது திருத்தம்) மசோதா, 2022

4. தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (மூன்றாவது திருத்தம்) மசோதா, 2022

5. தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு (திருத்தம்) மசோதா, 2022

6. தமிழ்நாடு தடுப்புச் சட்டத்தில் திருத்தம். (தங்கள் நெருங்கிய உறவினர்களின் மரணத்தில் கலந்து கொள்வதற்காக அவர்களைத் தற்காலிகமாக விடுவிப்பது தொடர்பாக மாவட்ட அளவில் உள்ள ஒரு அதிகாரிக்கு அரசாங்கத்தின் அதிகாரத்தை வழங்குதல்).

மேலும் ஒப்புதல் அளித்த மசோதாக்கள் விவரமும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகின்றது. பல்கலைக்கழக வேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்கும் வகையிலான மசோதாக்கள், கூட்டுறவுச் சங்கங்கள் பதவிக் காலத்தைக் குறைக்கும் சட்ட மசோதா, அடுக்குமாடி குடியிருப்பு உரிமை மசோதா, தமிழ்ப் பல்கலைக்கழக திருத்த மசோதா ஆகியவையும் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

-ம.பவித்ரா

source https://news7tamil.live/6-bills-approved-by-governor.html